Vikravandi by election: விக்கிரவாண்டியில் இருந்து அமைச்சர்களை வெளியேற்ற வேண்டும் - பாமக வழக்கறிஞர் பாலு புகார்
அமைச்சர்களாக இருப்பவர்கள் விழுப்புரத்தில் முகாமிட்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணி செய்வதால் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாக நடைபெறாது - பாமக வழக்கறிஞர் பாலு.
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ள 9 அமைச்சர்களை வெளியேற்ற வேண்டுமென்றும், கோழிப்பட்டு கிராமத்தில் திமுகவிற்கு வாக்களித்தால் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கோவில் கட்டி கொடுப்பதாக திமுகவினர் வாக்குறுதி அளித்துள்ளதாக குற்றஞ்சாட்டி பாமக வழக்கறிஞர் விக்கிரவாண்டி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.
9 அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி முதல் தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து தேர்தல் பணி செய்ய அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், எம்ஆர்கே பன்னீர்செல்வம், சக்கரபாணி, எ.வ.வேலு உள்ளிட்ட 9 அமைச்சர்கள் கொண்ட பணிக்குழு அமைத்து திமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர்களை வெளியேற்ற வேண்டும்
அமைச்சர்களாக இருப்பவர்கள் விழுப்புரத்தில் முகாமிட்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணி செய்வதால் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாக நடைபெறாது என்றும் இடைத்தேர்தலில் முகாமிட்டு அமைச்சர் பணியை மேற்கொள்வதை தேர்தல் விதிமுறைக்கு புறம்பானது என்று கூறி விக்கிரவாண்டி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் யுவராஜிடம் புகார் மனு அளித்தனர். மேலும் கோழிப்பட்டு கிராமத்தில் திமுகவிற்கு வாக்களித்தால் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கோவில் கட்டி கொடுப்பதாக திமுகவினர் தெரிவித்துள்ளதாகவும், பனையபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அமைச்சரால் மிரட்டப்படுவதாகவும் அரசு வழங்கும் நிதி பனையபுரத்திற்கு வழங்கப்படாது என அமைச்சர் கூறுவதாக குற்றஞ்சாட்டி புகார் மனு அளித்தனர். மேலும் அமைச்சர்களை வெளியேற்ற வேண்டுமென வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.