PM Modi ABP Exclusive: ஓபிசி கோட்டா.. அரசியலமைப்புக்கே அவமானம்.. வாக்கு வங்கி அரசியல் - மோடி ஆவேசம்
PM Narendra Modi Exclusive: மத அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது இந்திய அரசியலமப்புக்கே அவமானகரமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
PM Narendra Modi Exclusive: ஒபிசி ஒதுக்கீடு குறித்த மம்தா பானர்ஜியின் நிலைப்பாட்டை விமர்சித்ததோடு, கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பை கேள்விக்குட்படுத்தியதற்காகவும் அவருக்கு மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பிரத்யேக பேட்டி:
2024 மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவிற்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி ஏபிபி செய்தி குழுமத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அமோக ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்ததோடு, இடஒதுக்கீடுகள்,மேற்கு வங்க மாநில ஊழல் மற்றும் அந்த மாநிலத்தில் ரெமால் புயல் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் விரிவாக பேசியுள்ளார்.
மேற்குவங்க ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம்:
கடந்த 2010 முதல் வழங்கப்பட்ட பல பிரிவுகளுக்கான OBC அந்தஸ்தை, அண்மையில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அத்தகைய இட ஒதுக்கீடு சட்டவிரோதமானது என்றும் அறிவித்தது. இந்த தீர்ப்பை நிராகரித்தார் மம்தா பானர்ஜி, பாஜகவின் செல்வாக்கால் இத்தகைய தீர்ப்பு வந்துள்ளது என்றும் பேசினார். இதுதொடர்பாக பேசிய மோடி, “நீதிமன்ற தீர்ப்பை மம்தா எதிர்ப்பது நீதித்துறையை அவமதிக்கும் செயலாகும். மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயலாகும். இது குறித்து அரசியல் நிர்ணய சபை விவாதித்து, மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு இருக்கக்கூடாது என்று ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
பொருளாதார ரீதியாக மலிந்த பிரிவினர்:
பொருளாதார ரீதியாக மலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, ”எங்களது இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் மதத்தின் அடிப்படையில் இல்லாததால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே மத அடிப்படையில் நாட்டைப் பிரித்து விட்டோம். இடஒதுக்கீடு என்பது வாக்கு வங்கி அரசியலுக்கான கருவியாக இருக்கக்கூடாது. கர்நாடகத்தில் நடந்ததை போன்றே, மேற்குவங்கத்திலும் வாக்கு வங்கி அரசியலுக்காக ஒரே இரவில் 77 சமூகங்கள் ஒபிசி அந்தஸ்தை பெற்றுள்ளன. நாங்கள் இஸ்லாமியர்களை எதிர்க்கவில்லை, ஆனால் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை எதிர்க்கிறோம். அதை நமது அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை" என மோடி தெரிவித்தார்.
ஒபிசி இளைஞர்களின் வாய்ப்புகளை பறித்த மம்தா - மோடி:
பராசத்தில் நடந்த தேர்தல் பேரணியில் மம்தாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய மோடி, ஓபிசிக்கு திரிணாமுல் காங்கிரஸ் செய்த துரோகத்தை நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது. அக்கட்சி ஓபிசி இளைஞர்களின் உரிமைகளைப் பறித்து அதன் திருப்தி அரசியல் மற்றும் 'வோட் ஜிஹாத்' ஆதரவைப் பெற்றது. மேற்கு வங்கத்தின் ஓபிசிக்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் துரோகம் இழைத்துவிட்டது. அவர்களின் துரோகத்தையும் பொய்களையும் அம்பலப்படுத்துபவர்களை திரிணாமுல் காங்கிரஸ் விரும்புவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
அந்த கட்சி நீதித்துறையை எப்படிக் கேள்வி கேட்கிறது என்பதைப் பார்த்து நான் வியப்படைகிறேன். அவர்களுக்கு நீதித்துறை மீதும் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லையா? மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எப்படி நீதித்துறையின் கழுத்தை நெரிக்கிறது என்பதை முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது” என மோடி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.