Maharashtra Election: 50 தொகுதிகளில் இடைத்தேர்தல், மகாராஷ்டிரா & ஜார்கண்ட் தேர்தல் - பாஜக Vs I.N.D.I. கூட்டணி
Maharashtra Election: மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலுடன், 50 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Maharashtra Election: நாடு முழுவதும் நடைபெற உள்ள 50 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், வயநாடு தொகுதி மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் 2024:
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 288 தொகுதிகளை கொண்ட இந்த சட்டமன்றத்திற்கு, நவம்பர் 20ம் தேதிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க 9.63 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஒரு புறம் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் அடங்கிய கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சி அடங்கிய I.N.D.I. கூட்டணியும் தீவிரம் காட்டுகிறது.
ஆளும் பாஜக கூட்டணி மீது பல்வேறு அதிருப்திகள் நிலவுவதாகவே கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, கடந்த சில மாதங்களாகவே வாக்காளர்களை கவரும் விதமான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இருப்பினும் மராத்திய இடஒதுக்கீடு, அண்மையில் ஆளும் கூட்டணியை சேர்ந்த அரசியல் தலைவரான் சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டது போன்றவை அவர்களுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் மகாராஷ்டிராவில் தீவிரமாக களமாடி வருகின்றனர். அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும், மொத்தமுள்ள 48 தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் 30 தொகுதிகளை கைப்பற்றி பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்தன. இதே வேகத்தில் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலிலும் களமாட தயாராகி வருகின்றனர். இதனால் பாஜக Vs I.N.D.I. கூட்டணி என மகாராஷ்டிரா சட்டமன்ற களம் சூடுபிடுத்துள்ளது.
ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் 2024:
மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில், 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்டில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில், வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் வாக்களிக்க 2.6 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இங்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நிலமோசடி வழக்கில் கைதாகி அண்மையில் ஜாமினில் வெளியான ஹேமந்த் சோரன், மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். இதனிடையே, இடைக்கால முதலமைச்சராக இருந்த சம்பாய் சோரன் பாஜகவில் இணைந்தது, ஆளுங்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும், அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் 9 தொகுதிகளை பாஜக கூட்டணியே கைப்பற்றியது. இதனால், மீண்டும் அங்கு ஹேமந்த் சோரன் ஆட்சியை பிடிப்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
50 தொகுதிகளில் இடைத்தேர்தல்:
இதனிடையே, உத்தரப்பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, கேரளா, உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான் ம்ாற்றும் சிக்கிம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 48 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ராஜஸ்தானில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மேற்குவங்கத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்தது அல்லது உயிரிழந்தன் காரணமாக இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கவனம் ஈர்க்கும் வயநாடு:
வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் ரேபரேலி தொகுதிய தக்கவைத்துக் கொண்டு, வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள வயநாடு தொகுதியில், ராகுலின் உடன்பிறந்த சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

