ஹாட்ரிக் தோல்விக்கு தயாராகிறதா அதிமுக?; வெளியூர் வேட்பாளரா- உள்ளூரில் யாருமே இல்லையா? - கடுக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்
இம்முறையாவது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோமா என காத்திருந்த தூத்துக்குடி ரத்தத்தின் ரத்தங்கள், வட போச்சே என புலம்பி வருகின்றனர்.
தொகுதி சீரமைப்புக்குப் பிறகு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி கடந்த 2008-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில், விளாத்திக்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்குகின்றன. அதன் தொடர்ச்சியாக, கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில், எஸ்.ஆர். ஜெயதுரையும், அதிமுக சார்பில் பேரவை முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியனும் போட்டியிட்டனர். இதில், எஸ்.ஆர். ஜெயதுரை 87 ஆயிரத்து 652 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினர் என்ற பெருமைக்குரியவரானார்.
தொடர்ந்து, 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெ. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, திமுக வேட்பாளர் ஜெகனை விட ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 2 வாக்குகள் அதிகம் பெற்று மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக மற்றும் அதிமுக தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ள நிலையில், 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியை களம் இறக்க, அவருக்கு இணையாக ஒரு விஐபி வேட்பாளர் மற்றும் தொகுதியின் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என கருதி அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் அன்றைய பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் களம் இறக்கப்பட்ட அவர் தோல்வியை சந்தித்தார். அதோடு நிற்காமல், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்தவர்கள் போட்டியிட விருப்பப்பட்டாலும் கூட அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாத அதிமுக தலைமை தூத்துக்குடி தொகுதியை தமாகாவிற்கு தாரை வார்த்தது. விளைவு மீண்டும் படுதோல்வியை சந்தித்தது அதிமுக.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியானது உதயமானதில் இருந்து திமுக, அதன்பின் அதிமுக, அடுத்து திமுக என்ற ரீதியில் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை அதிமுக வெற்றி பெற வேண்டும் அப்பொழுது தான் கணக்கு சரியாக வரும் என அதிமுகவினர் ஒரு புறம் கணக்கு போட்டு இருக்க, அவர்களின் கணக்கில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக வேட்பாளர் தேர்வு இருப்பதாக உள்ளூர் ரத்தத்தின் ரத்தங்கள் கவலை முகம் காட்ட தொடங்கி விட்டனர்.
இரண்டு தேர்தலில் பெற்ற பாடத்தை கற்காத அதிமுக தலைமை இம்முறை தென் சென்னை வட மேற்கு மாவட்டம் தி.நகர் வடக்கு பகுதி செயலாளரான, வடபழனி புத்தூர் கட்டு மருத்துவர் ஆர்.சிவசாமி வேலுமணியை தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் களம் இறக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் வேறு யாருமல்ல தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற ஜெயதுரையின் உடன்பிறந்த சகோதரர், மேலும் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதனின் உடன்பிறந்த அக்கா மகனும் ஆவார். இம்முறையாவது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோமா என காத்திருந்த தூத்துக்குடி ரத்தத்தின் ரத்தங்கள், வட போச்சே என புலம்பி வருகின்றனர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வருசாவருசம் விருப்ப மனு பெறும் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், வழக்கறிஞர் ஆன்ட்ரூ மணி, தா.மி.பிரபு, சுதாகர் என வரிசை நீண்டு கொண்டே செல்ல அதிமுக தலைமையோ செவிமடுக்க மறுப்பதாக கூறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
இதுகுறித்து ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசிய போது, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மட்டுமல்லாது நாடாளுமன்ற தொகுதியிலும் அதிமுகவினருக்கு அளிக்கும் முக்கியத்தும் அளிக்க வேண்டும். அதே நேரத்தில் முன்பு பாஜகவை சேர்ந்த தமிழிசை, இப்போ வேலுமணின்னு வேட்பாளர்கள்னு இறக்குமதிக்கே அதிமுக தலைமை வாய்ப்பளித்தால் நாங்க இந்த தேர்தலில் வோட்டே போடாம கம்முன்னு இருக்க வேண்டியது தான், தூத்துக்குடி தெற்கு வடக்கு மாவட்ட செயலாளர்கள் இருக்காகளா இல்லையான்னு தெரியல என்றனர்.