Lok Sabha elections 2024: நாளை கடைசி கட்ட மக்களவை தேர்தல்.. களமிறங்கும் நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார்..?
நாளை நடைபெறும் கடைசி கட்ட மக்களவை தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார் உள்ளனர்..? அவர்கள் எந்த இடத்தில் போட்டியிடுகிறார்கள் என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம்.
மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் (மே 30ம் தேதி) முடிவடைந்தது. இதையடுத்து, எட்டு மாநிலங்களில் உள்ள 57 மக்களவை தொகுதிகளுக்கான கடைசி கட்ட தேர்தலானது நாளை (ஜூன் 1ம் தேதி) நடைபெறுகிறது. இந்த கடைசி கட்ட தேர்தலிலும் பாஜக - இந்திய கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், நாளை நடைபெறும் கடைசி கட்ட மக்களவை தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார் உள்ளனர்..? அவர்கள் எந்த இடத்தில் போட்டியிடுகிறார்கள் என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம்.
நட்சத்திர வேட்பாளர்கள்:
1. பிரதமர் நரேந்திர மோடி (பாஜக) மற்றும் அஜய் ராய் (காங்கிரஸ்):
கடந்த 2014ம் ஆண்டு முதல் வாரணாசி மக்களவைத் தொகுதி பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியாக இருந்து வருகிறது. இப்படியான நிலையில்தான், காங்கிரஸ் கட்சி வாரணாசியில் 3வது முறையாக அஜய் ராய் என்ற வேட்பாளரை களமிறங்கியுள்ளது. முன்னதாக, பாஜகவில் இருந்த அஜய் ராய், கடந்த 2007ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர், கடந்த 2012ம் ஆண்டு அஜய் ராய் காங்கிரஸில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கட்சி அவரை வாரணாசியில் நிறுத்தியது. 2019 மக்களவைத் தேர்தலில் அஜய் ராய் மூன்றாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. ரவி கிஷன் (பாஜக):
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் தொகுதியில் ரவி கிஷனை பாஜக கட்சி, வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இவருக்கு எதிராக இந்த தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் காஜல் நிஷாத் போட்டியிடுகிறார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ரவி கிஷன் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சி சார்பில் வேட்பாளராக நின்ற ராம்புவால் நிஷாத் 4,15,458 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
3. கங்கனா ரனாவத் (பாஜக):
இந்த 2024 மக்களவை தேர்தலில், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார். காங்கிரசின் கோட்டையான மண்டி தொகுதியில் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங்கை எதிர்த்து கங்கனா போட்டியிடுகிறார் என்பதுதான் இங்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள நான்கு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
4. அனுராக் தாக்கூர் (பாஜக):
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சத்பால் சிங் ரைசாடா போட்டியிடுகிறார். அனுராக் தாகூர் முதல் முறையாக 2008 இல் அவரது தந்தை பிரேம் குமார் துமால் முதல்வராக பதவியேற்ற பிறகு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதை தொடர்ந்து 2009, 2014 மற்றும் 2019 ஆகிய மூன்று மக்களவை தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றார்.
5. அபிஷேக் பானர்ஜி (டிஎம்சி):
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்கத்தின் டயமண்ட் ஹார்பர் மக்களவைத் தொகுதியில் அபிஷேக் பானர்ஜியை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸூன் முக்கியமான கோட்டையாக டயமண்ட் ஹார்பர் கருதப்படுகிறது. இந்த தொகுதியில் அபிஷேக் பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிகுர் ரஹ்மான், பாஜக சார்பில் அபிஜித் தாஸ் ஆகியோர் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில், அபிஷேக் பானர்ஜி பாஜக வேட்பாளரை 3.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
6. மிசா பார்தி (ஆர்ஜேடி):
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகள் மிசா பார்தி பீகாரில் உள்ள பாட்லிபுத்ரா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்ததன் மூலம், மிசா பார்தியை ராம் கிரிபால் யாதவ் தோற்கடித்தார். 2019 மக்களவைத் தேர்தலில் ராம் கிரிபால் யாதவ் மீண்டும் மிசா பார்தியை தோற்கடித்தார்.