Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இன்று நான்காவது கட்டமாக, 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
Lok Sabha Election Phase 4 Polling: நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலன் நான்காம் கட்டத்தில், 17 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
நான்காம் கட்ட வாக்குப்பதிவு:
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏற்கனவே மூன்று கட்டமாக நடந்து முடிந்துள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 283 இடங்களுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இன்று 4ம் கட்டமாக 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 17.7 கோடி பேர் இன்று வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதற்காக ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, ஆந்திரபிரதேசத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஒடிசாவில் உள்ள 28 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
எந்தெந்த மாநிலங்களில்?
ஆந்திராவில் 25 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்க்கண்டில் நான்கு தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்ட்ராவில் 11 தொகுதிகள், ஒடிஷாவில் நான்கு தொகுதிகள், தெலங்கானாவில் 17 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
1700+ வாக்காளர்கள்:
96 தொகுதிகளில் போட்டியிட நான்காயிரத்து 264 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதிகபட்சமாக, தெலங்கானாவில் உள்ள 17 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 1488 வேட்புமனுப் படிவங்களும், அதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளுக்கு 1103 வேட்புமனுக்களும் கிடைக்கப் பெற்றன. பரிசீலனைக்குப் பிறகு அவற்றில் 1970 வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. இறுதியில் சில வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றதால், தற்போது ஆயிரத்து 717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 4 வது கட்டத்திற்கு ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி எண்ணிக்கை 18 ஆக உள்ளது.
நட்சத்திர வேட்பாளர்கள்:
ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன் மோகனின் தங்கை ஒய்.எஸ். ஷர்மிளா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் களம் காண்கிறார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பீகாரில் களம் காண்கிறார். மற்றொரு மத்திய அமைச்சரான அர்ஜுன் முண்டா ஜார்கண்டில் போட்டியிடுகிறார். அசாதுதீன் ஓவைசி மற்றும் மத்திய அமைச்சரான கிஷன் ரெட்டி ஆகியோர் தெலங்கானாவில் போட்டியிடுகின்றனர். நடிகர் சத்ருகன் சின்ஹா மேற்குவங்கத்தில் களம் காண்கிறார். மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில், மஹுவா மொய்த்ரா மீண்டும் களமிறங்கியுள்ளார்.
பாதுகப்பு நடவடிக்கைகள்:
முன்னதாக, 85 வயத கடந்த 12.49 லட்சம் மூத்த குடிமக்களுக்கும், 19.99 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் வீட்டிலேயே வாக்களிக்கும் வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நான்காம் கட்ட வாக்குப்பதிவை ஒட்டி மொத்தம் 4661 பறக்கும் படைகள், 4438 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 1710 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 934 வீடியோ பார்க்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. போலீசார் மற்றும் துண ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.