மோடி மஸ்தான் வித்தை காட்டுபவர் பிரதமர் நரேந்திர மோடி- மாணிக்கம் தாகூர் விமர்சனம்
மோடி மஸ்தான் வித்தை காட்டுபவர் பிரதமர் நரேந்திர மோடி. ராகுல் காந்தி பிரதமரானால் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும். அதையே தமிழக அரசும் அறிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா வழங்காத ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் திட்டத்தை துவக்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என பரப்புரையில் மாணிக்கம் தாகூர் பேசினார்.
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகரின் பல்வேறு இடங்களில் இந்தியா கூட்டணியின் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: 500 ரூபாயாக இருந்த எரிவாயு சிலிண்டர் விலையை 1200 ரூபாய்க்கு உயர்த்தியவர் நரேந்திர மோடி. இந்த தேர்தலை முன்னிட்டு 500 ரூபாய் குறைக்கப்படும் என டகால்டி வேலை செய்து மோடி மஸ்தான் வித்தை காட்டுபவர் பிரதமர் நரேந்திர மோடி. ராகுல் காந்தி பிரதமரானால் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும். அதையே தமிழக அரசும் அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கான உரிமை தொகையை வழங்கி வருகிறார். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிக்குள் செல்போனில் டிங் டிங் என ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வருகிறது. மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏன் அவரது வீட்டுக்காரருக்கு கூட தெரியாது.
கணவன்மார்களுக்கு தெரிந்தால் அந்த உரிமை தொகையானது டாஸ்மாக் கடைக்கு போய்விடும். இந்தியாவிலேயே தமிழகத்திலும் காங்கிரஸ் ஆளும் கர்நாடகா மாநிலத்திலும்தான் மகளிருக்கான உரிமை தொகை வழங்கப்பட்டு வரப்படுகிறது. அந்த உரிமைத்தொகையில் இருந்து ஒன்றிய அரசால் 500 ரூபாய் களவு செய்யப்படுவதை நிறுத்துவதற்கு நாம் பிரதமரை மாற்ற வேண்டும். டீசல் விலை உச்சத்தில் உள்ளது. அதனை லிட்டருக்கு 30 ரூபாய் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விலைவாசி குறைந்தால் செலவினங்கள் குறைந்து முக்கிய மாற்றங்கள் ஏற்படும். தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை பெண்களுக்கு மாதம் மாதம் வழங்கப்படுவது போல, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது தாய்மார்களுக்கு மகாலட்சுமி திட்டத்தின் மூலமாக வருடம் தோறும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தல் பரப்புரையில் வேட்பாளர் மாணிக்கம் தாகூருடன், சிவகாசி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் அரசன் அசோகன், மாநகராட்சி மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா ஆகியோர் பங்கேற்று கைச்சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.
பள்ளி விடுமுறை என்பதால் தேர்தல் பரப்புரையின்போது சிறுவர்கள் கலந்து கொண்டு திமுக கூட்டணி கட்சிகளின் கொடிகளை கையில் வைத்துக் கொண்டு பேண்ட் செட் முழக்கத்திற்கு ஏற்றவாறு ஆட்டம் ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.