Lok Sabha Election 2024: சிதம்பரம், விழுப்புரத்தில் மீண்டும் வி.சி.க. போட்டி - வெளியானது வேட்பாளர் பட்டியல்?
மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க. கடந்த முறை போட்டியிட்டு வெற்றி விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியிலே மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நாளை அறிவிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. ஆனால், எந்தெந்த தொகுதியில் எந்தெந்த கட்சிகள் போட்டி என்ற அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த சூழலில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வி.சி.க. கடந்த முறை சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டனர். இதனால், இந்த முறையும் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியிலே போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வி.சி.க. தலைவர் திருமாவளவன் மீண்டும் சிதம்பரம் தொகுதியிலும், ரவிக்குமார் எம்.பி. விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதே தொகுதியில் களமிறங்கும் வி.சி.க.:
வி.சி.க. இந்த தேர்தலில் தங்களுக்கு 3 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில், கூட்டணியில் அதிக கட்சிகள் இருந்த காரணத்தினால் கடந்த முறையை போலவே இந்த முறை வி.சி.க.விற்கு இரண்டு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை எந்தெந்த தொகுதகிள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாவிட்டாலும், சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியிலே போட்டியிட வி.சி.க.வினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.
தனிச்சின்னம்:
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட வி.சி.க. தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை இரண்டு தொகுதிகளிலும் தனிச்சின்னத்திலே போட்டியிட விடுதலை சிறுத்தைகள் முடிவு செய்துள்ளது. வி.சி.க. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
மக்களவைத் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளதால் விரைவில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் தங்களது பரப்புரையை தீவிரமாக மேற்கொள்ள உள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தலா 2 தொகுதிகளிலும், வி.சி.க. 2 தொகுதியிலும், ம.தி.மு.க. 1 தொகுதியிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகின்றனர். அவர்களது வேட்பாளராக நவாஸ் கனி அறிவிக்கப்பட்டுள்ளார். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
மேலும் படிக்க: Lok sabha Election: சந்தேகமே வேண்டாம்! பா.ஜ.க.வுடன்தான் கூட்டணி - ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்
மேலும் படிக்க: கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு ; காவல்துறை அளித்த விளக்கம் என்ன?