Lok Sabha Election 2024: வாக்குச்சாவடியில் ஓட்டு போட கூட்டம் இருக்கா? அறிந்துகொள்ள புதிய வசதி!
வாக்குச்சாவடியில் ஓட்டு போட கூட்டம் இருக்கா? அறிந்துகொள்ள புதிய வசதி!
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வந்த தீவிர வாக்கு சேகரிப்பு நேற்று முன்தினம் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியில் இருந்த வெளியூர் நபர்கள் எல்லாம் வெளியேற உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து வாக்களிக்க சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேசமயம் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.
You can check the number of people waiting in queue at Polling Station - https://t.co/okrowwI5k8 #TNElection2024 #Election2024 pic.twitter.com/tc9ijOpZGm
— Sathish Kumar M (@sathishmsk) April 18, 2024
காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. பூத் சிலிப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயில் காலமாக இருப்பதால் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளில் குவிந்து விடுவார்கள் என பலரும் மெதுவாக செல்லலாம் என நினைத்திருப்பார்கள்.
அப்படியானவர்களுக்கு தேர்தல் ஆணையம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளத்துக்கு சென்று அதில் உங்களுடைய மாவட்டம், தொகுதி, வாக்குச்சாவடி பெயரை தேர்வு செய்தால் அதில் வரிசையில் எத்தனை பேர் நிற்கிறார்கள் என்பதை அறியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையிலான வசதிகள் வாக்குச்சாவடியில் செய்யப்பட்டுள்ளது. எனவே வாக்குரிமை உள்ள ஒவ்வொருவரும் மறக்காமல் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுமாறு தேர்தல் ஆணையம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.