Lok Sabha Election 2024: ஜோதிமணிக்கு எதிராக இரண்டு ஜோதிமணிகள் போட்டி - கரூர் அரசியலில் பரபரப்பு
கரூர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜோதிமணிக்கு இந்தியா கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட கடுமையான போராட்டத்திற்கு பிறகு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கரூர் பாராளுமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 54 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், ஜோதிமணி பெயரில் போட்டியிடும் 3 பேருக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கரூர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜோதிமணிக்கு இந்தியா கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட கடுமையான போராட்டத்திற்கு பிறகு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தொகுதி முழுவதும் திமுக அமைச்சர்களுடன் ஜோதிமணி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை தாலுக்கா, கருப்பூர் கிராமத்தை சேர்ந்த 37 வயதுடைய "செந்தில் என்பவரின் மனைவி ஜோதிமணி" என்பவருக்கு ஆட்டோ ரிக்சா சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதே போல் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த 61 வயதுடைய கருப்பண்ணன் என்பவரின் மகன் ஜோதிமணி என்பவரும் கரூர் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு ஊஞ்சல் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 பேர் களத்தில் உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு எதிராக ஜோதிமணி பெயரிலேயே இரண்டு பேர் போட்டியிடுவது கரூர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து, நான்கு பேர் அதே பெயரில் போட்டியிடுகின்றனர். தற்போது கரூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணிக்கு எதிராக இரண்டு ஜோதிமணிகள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.