PMK BJP Alliance: திடீர் திருப்பம்: அதிமுக-வுக்கு டாடா; பாஜக கூட்டணியில் பாமக: 10+1 பார்முலாவுக்கு ஓகே சொன்ன மோடி?
Lok Sabha Election 2024: பாமக-வுக்கு ஓர் அமைச்சர் பதவிகூட கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தைலாபுரத்தில் விடயம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள் என்பதையும் இங்கு பதிவு செய்கிறோம்.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வந்தவுடனேயே, தென்னிந்தியாவில் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துவிட்டது. குறிப்பாக, தமிழகத்தில் கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு, தேர்தல் அனல் வீசுகிறது. அதுவும், வட மாவட்டங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் பாமக-வின் முடிவு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு முனைப் போட்டி:
இம்முறை தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி இருப்பது உறுதியாகிவிட்டது. இதில், திமுக கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாட்டை முடித்து, வேட்பாளர்களைக் கூட அறிவிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், பாஜகவும் அதிமுகவும் தங்களது கூட்டணிகளை முழுமையாக இதுவரை அறிவிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பாட்டாளி மக்கள் கட்சியும், தேமுதிக-வும் தான். இந்த இரு கட்சிகளும் யாருடன் கூட்டணி என்பதை இதுவரை முடிவு செய்யவில்லை.
திடீர் திருப்பம் தந்த பாமக:
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறுகிறது என கிட்டத்தட்ட அறிவிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர். குறிப்பாக, பாமக தொண்டர்களும் முன்னணி நிர்வாகிகளும் அதிமுக கூட்டணிதான் என வெளிப்படையாகவே பேசி வந்தனர். இந்தச்சூழலில், இன்று பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில், பல மணி நேர ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்குப் பிறகு, கூட்டணியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஓகேவான 10+1 ஃபார்முலா:
அதன்படி, ஏபிபி நாடு செய்தித் தளமாக நமக்குக் கிடைத்த உறுதியான தகவலின்படி, அதிமுக-வுக்கு டாடா சொல்லிவிட்டது பாமக. பிரதமர் மோடி தலைமையில் சேலத்தில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, பாஜக கூட்டணியில் இணைந்ததை உறுதி செய்ய இருக்கிறார் டாக்டர் அன்புமணி ராமதாஸ். இது தொடர்பாக, நமக்கு கிடைத்த தகவலின்படி, பாமக-வுக்கு 10 தொகுதிகளும் 1 ராஜ்ய சபா இடமும் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கு பாஜக தலைமையும் சம்மதித்துவிட்டதால், தொகுதி உடன்பாட்டை நாளைய கூட்டத்தில் பங்கேற்பின் மூலம் வெளிப்படையாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இதுகுறித்த தகவலை பாமகவின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உறுதியும் செய்துள்ளார்.
மோடி தலைமையில் அறிவிக்கும் பாமக
சேலத்தில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பாஜக கூட்டணியில் தமாகா தலைவர் ஜி கே வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர், அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகர் சரத்குமார் உள்ளிட்டோருடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் பங்கேற்கிறார். இந்த உடன்பாட்டின்படி, பாமக-வுக்கு ஓர் அமைச்சர் பதவிகூட கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தைலாபுரத்தில் விடயம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள் என்பதையும் இங்கு பதிவு செய்கிறோம். ஆனால், இந்தத் தகவலின் உண்மைதன்மையை உறுதி செய்ய முடியவில்லை.
அதிர்ச்சியில் அதிமுக:
பாமக-வின் முடிவால், அதிர்ச்சி அடைந்துள்ள அதிமுக, கூட்டணியில் தேர்தலில் செல்வாக்கு மிகுந்த பெரிய கட்சி ஏதுமின்றி, தனிப்பட்ட செல்வாக்கு களம் காண இருக்கிறது எனலாம். தற்போதைய நிலையில், தேமுதிக-வுடன் கூட்டணி பேச்சு நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. தற்போது பாமக-வின் நிலையை பார்க்கும்போது, தேமுதிக-வின் நிலை என்ன என்பதை, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் போதுதான் உறுதி செய்ய முடியும்.