பாஜகவும், அதிமுகவும் சேர்ந்து தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்துவிட்டன - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தஞ்சாவூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
தஞ்சாவூர்: முதல்வரின் காலை உணவு திட்டம் பிற மாநிலங்களில் மட்டுமின்றி கனடா நாட்டிலும் பின்பற்றப்படுகிறது. திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று அமைச்சரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
நேற்று இரவு ஒரத்தநாடு, தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் திமுக வேட்பாளர் ச. முரசொலிக்கு ஆதரவாக வியாழக்கிழமை இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 2021ல் மக்களின் அன்பை பெற்று முதல்வராக பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தாக பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்திற்கு போட்டார். இதன் மூலம் பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் 460 கோடி பயணங்கள் மேற்கொண்டு, பயனடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 13 கோடியே அஞ்சாயிரம் பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கிறீங்க இத்திட்டம் மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இதைப் பார்த்து கர்நாடக மாநிலத்தில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல் அரசின் வெற்றி.
இதேபோல, புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 3 லட்சம் கல்லூரி மாணவிகள் மாதம் ரூ.1000 பெறுகின்றனர். இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரம் மாணவிகள் பயனடைகின்றனர். இப்போ மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்தியாவிலேயே முதல் முதலாக தமிழகத்தில்தான் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பார்த்து தெலங்கானா, கர்நாடக மாநிலங்களிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தைப் பார்த்து கனடா நாட்டிலும் அந்நாட்டு பிரதமர் இதை நடைமுறைப்படுத்தி உள்ளார். இந்தியா மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் திராவிட மாடல் அரசு முன்மாதிரியாக உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தமிழகத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைகின்றனர். இதில் சில குறைகள் உள்ளது, இது நிவர்த்தி செய்யப்படும். இந்த திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 4.22 லட்சம் பயன்பெற்று வருகின்றனர். நாம ஜிஎஸ்டி வரி கட்டுறோம். ஒன்றிய அரசுக்கு ஒரு ரூபா கட்றோம். நாம ஒரு ரூபா கட்ட நமக்கு திருப்பி எவ்வளவு தெரியுமா. 29 பைசாதான் தருகிறார். பீகாரில் ரூ.1க்கு ரூ.7 கொடுக்கிறார். உத்தரபிரதேசத்தில் ரூ.3 திருப்பி கொடுக்கிறார். இந்த மூன்று ரூபாய் ஏழு ரூபாய் யாருடைய காசு நம்ம கட்டுற காசு தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணம் நீங்க கட்ட வரிப்பணத்தை தூக்கி மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கிறாரு.
எங்களுக்கு நீட் தேர்வு வேணாம். பொதுத்தேர்வு 12ஆம் வகுப்பு தேர்வு போதும்னு சொன்னவர் கலைஞர். இன்னும் சொல்லப்போனால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த வரைக்கும் தமிழ்நாட்டுக்குள்ள நீட் தேர்வு வரல. அந்த அம்மையார் இறந்த பிறகு இந்த அடிமைகள் எல்லாம் சேர்ந்து அதிமுக அடிமை அமைச்சர்கள் எல்லாம் சேர்ந்து பாஜக உடைய அழுத்தத்தின் காரணமாக நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் கொண்டு வந்து 22 குழந்தைகள் இறந்திருக்கிறார்கள்.
பாதம்தாங்கி பழனிசாமி சொல்கிறார். பேச மாத்தி பேச சொல்லுப்பான நான் என்ன பச்சோந்தியா. அதிமுக காரன் மாதிரி பழனிசாமி மாதிரி பேசுறதுக்கு. பல நாட்கள் ஒவ்வொரு மாதிரி பேசுவீங்க நான் எப்பொழுதுமே என் கொள்கையைத்தான் பேசுவேன். நான் பேசுனதையே பேசிட்டு இருக்கேன் என்று. பெரியார் என்ன சொன்னாரே அதைத்தான் பேசுவேன். அம்பேத்கார் என்ன சொன்னாரோ அதைத்தான் பேசுவேன். கலைஞர் என்ன சொன்னாரோ அதுதான் பேசுவேன். சமூக நீதிதான் பேசுவேன். எங்களுக்கு மாநில சுயாட்சி வேணும்னு தான் பேசுவேன். எங்க மாநில உரிமைகள் மீட்க வேண்டும் என்றுதான் தான் பேசுவேன். எய்ம்ஸ் மருத்துவமனை வேணும்னு தான் பேசுவேன். சிஏ சட்டம் வேண்டாம் என்றுதான் பேசுவேன். நம்முடைய கொள்கை பற்றி மட்டும் தான் பேசுவேன்.
மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். பாஜகவும், அதிமுகவும் சேர்ந்து தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்துவிட்டன. இவற்றை மீட்டெடுக்க தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இதில், தஞ்சாவூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் எம்.பி., எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தஞ்சாவூர் எம்எல்ஏ., டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.