ஜோதிமணியின் நன்றி அறிவிப்பு விழாவில் செந்தில் பாலாஜி இருப்பார் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கரூர் பாராளுமன்ற தொகுதியில் ஜோதிமணியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்.
"தேர்தலுக்குப் பிறகு ஜோதிமணியின் நன்றி அறிவிப்பு விழாவில், செந்தில் பாலாஜி கண்டிப்பாக இருப்பார். இந்த முறை எதிரணியினர் டெபாசிட் இழக்க வேண்டும்" என கரூரில் நடந்த தேர்தல் பரப்புரையில் உதயநிதி பேசினார்.
கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் கரூர் பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
நான் கலைஞரின் பேரன்
அப்போது பேசிய அவர், ”தொடர்ந்து 11 நாள் பிரச்சாரம் செய்து வருகிறேன். இன்று கரூர் தொகுதிக்கு வந்துள்ளேன். தொண்டையில் பிரச்சனை வந்துவிட்டது. திமுக, இந்தியா கூட்டணியின் வெற்றி என்பது 200% உறுதி. எனக்காக கடும் வெயிலில் இவ்வளவு நேரம் காத்திருந்தத உங்களுக்கு நன்றி. ஜோதிமணிக்காக கை சின்னத்தில் வாக்கு கேட்க வந்தேன். உங்கள் உற்சாக வரவேற்பும், வேகமும் இன்னும் 15 நாள் அப்படியே இருக்க வேண்டும். கை சின்னத்திற்கு நீங்கள் போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு. இந்த மண்ணின் மைந்தர் செந்தில்பாலாஜி ஆதரவு பெற்ற வேட்பாளர் ஜோதிமணி. சென்ற முறை ஜோதிமணிக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். இந்த முறை 5 லட்சம் வித்தியாசம் வேண்டும். எதிரணியினர் டெபாசிட் இழக்க வேண்டும். ஜோதிமணியை வெற்றி பெற வைத்தால், நான் கரூருக்கு மாதம் 2 முறை வருவேன். 100 % பணிகளை நிறைவேற்றுவேன். நான் கலைஞரின் பேரன். சொன்னதை செய்வேன். பாஜக அரசை வீட்டுக்கு அனுப்புவதே நமது ஒரே குறிக்கோள்.
பாதம் தாங்கி பழனிசாமி
கரூர் - கோவை சாலை விரிவாக்கப்பணிகள் விரைந்து தொடங்கும். 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி 400 ரூபாய் சம்பளம் வழங்க நடவடிக்கை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். இவை நமது முதல்வர் கொடுத்துள்ள வாக்குறுதிகள். 2021 தேர்தலில் கரூர் வந்து செந்தில் பாலாஜிக்காக ஆதரவு திரட்டினேன். அவரை வெற்றி பெற வைத்தீர்கள். இந்த மூன்று ஆண்டுகளில் கரூரில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. காலில் விழுந்து முதல்வரானவர் முன்னாள் முதல்வர் எடப்பபாடி பழனிசாமி. பாதம் தாங்கி பழனிசாமி. வெட்கமில்லாமல் அதை பெருமையாக பேசுகிறார். மீண்டும் சசிகலா காலில் போய் எடப்பாடி விழுந்தால், அவர் உங்களை எட்டி உதைப்பார்.
வாயில் வடை சுடுகிறார். அந்த வடையை அவரே சாப்பிடுகிறார்
எடப்பாடி சசிகலாவுக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் நம்பிக்கை துரோகம் செய்தவர். விளக்கு பிடிங்க, கை தட்டுங்க, மணி ஆட்டுங்க என்று கொரோனா காலத்தில் பேசினார்கள். ஆனால், நமது முதல்வர், கொரோனா வார்டுக்கு சென்று நலம் விசாரித்தார். மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை மகளிர் ஸ்டாலின் பஸ் என்றே அழைக்கின்றனர். 460 கோடி பயணங்கள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தமிழகத்திற்கு இதுவரை ஒன்றும் செய்யவில்லை. வாயில் வடை சுடுகிறார். அந்த வடையை அவரே சாப்பிடுகிறார். அவர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும், ஒரு தொகுதியிலும் டெபாசிட் கூட வாங்க முடியாது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது. இது மிகப்பெரிய திட்டம். இன்னும் ஆறு மாதங்களில் குறைகள் சரி செய்யப்படும். அதற்கு நானும், அமைச்சர்களும் பொறுப்பு.
இந்தியாவிலேயே முதன் முறையாக நமது முதல்வர் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இப்போது பல மாநிலங்கள் அவற்றை பின்பற்றுகின்றன. அந்த திட்டத்தை கனடா நாட்டிலும் விரிவுபடுத்தி அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். பிரதமருக்கு செல்லப்பெயர் வைத்துள்ளேன். 29 பைசா. (பிரச்சாரத்தின் இடையே ஆம்புலன்ஸ் வந்ததால், அந்த ஆம்புலன்ஸ்க்கு வழிவிட சொல்லி தொண்டர்களை கேட்டுக் கொண்டார்) பீகார் மாநிலம் ஜிஎஸ்டிக்கு 1 ரூபாய் வரி கட்டினால், பிரதமர் அவர்களுக்கு 7 ரூபாய் கொடுக்கிறார். உத்தரபிரதேசத்திற்கு 3 ரூபாய் தருகிறார். 2019 ஆம் ஆண்டு எய்ம்ஸ் கட்டுவதாக சொல்லி நட்டு வைத்த செங்கல் இதுதான். நானே மறந்தாலும், இந்த செங்கல்லை நீங்கள் மறக்க மாட்டீர்களா என உதயநிதி கேள்வி எழுப்பினார். ஆனால், சென்னையில் 10 மாதத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நமது முதல்வரால் கட்டப்பட்டது.
ஜோதிமணியின் நன்றி அறிவிப்பு விழாவில் செந்தில்பாலாஜி
ஓபிஎஸ்-ம், இபிஎஸ்-ம் கூட்டாளிகளாக இருந்தபோது, சட்டமன்றத்தில் என் காரை எடுத்துச் செல்லுங்கள் என்று நகைச்சுவையாக சொன்னேன். ஆனால், கமலாலயம் பக்கம் செல்ல வேண்டாம் என்று கூறினேன். எங்களுடைய வாகனம் எந்த நேரமும் கமலாலயம் செல்லாது என்றும், எம்ஜிஆர் சமாதிக்கு மட்டும்தான் செல்வோம் என்று கூறினார். இப்போது ஓபிஎஸ் எங்கு இருக்கிறார். அரசியலில் அனாதை ஆகிவிட்டார். போன முறை 40க்கு 39 தொகுதி என்ற பெரிய அங்கீகாரத்தை மக்கள் கொடுத்தார்கள். இந்த முறை 40க்கு 40 என்ற வெற்றியை கலைஞர் பிறந்த நாளில் பரிசாக வழங்குவோம். கல்வி உரிமை, நிதி உரிமை, மொழி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளை மீட்க, இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி நான் மாற்றி, மாற்றி பேச வேண்டும் என்று கூறுகிறார். நான் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் ஒரே மாதிரி தான் பேசுகிறேன். அதானி ஏர்போர்ட், துறைமுகம், மின்சாரம் வந்துவிட்டது. நம் மீது மிரட்டல்கள் விடுகின்றனர். செந்தில்பாலாஜியை சிறையில் வைத்துள்ளார்கள். திமுக அவரை கைவிடாது. அந்த பொய் வழக்குகளை உடைத்து, அவரை வெளியே கொண்டு வருவோம். ஜோதிமணியின் நன்றி அறிவிப்பு விழாவில், செந்தில் பாலாஜி கண்டிப்பாக இருப்பார்” என்று பேசினார்.