Lok Sabha Election 2024: மாடு பூட்டி வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் - மயிலாடுதுறையில் சுவாரசியம்
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்தியாசமான முறையில் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தது அனைவரின் கவனத்தை ஈர்த்ததுள்ளது.
மயிலாடுதுறையில் சூடுபிடித்த தேர்தல் களம்
இந்தியா நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து நாடுமுழுவதும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைப்பது தொடர்பான பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுப்பட்டு ஒருவழியாக கூட்டணிகளை உறுதி செய்து, அவர்களுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்து தற்போது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் முடிவான நிலையில் இன்னும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்படாமல் உள்ளது.
நேற்று வரை பூஜ்ஜியம் இன்று 5 பேர் வேட்புமனு
மேலும் தமிழகத்தில் முதற்கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 -ம் தேதி தொடங்கி தொடர்ந்து நாடு முழுவதும் ஜூன் 1 -ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 -ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் தேதி அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து, பொதுக்கூட்டங்கள் நடத்துவது, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுப்பது உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு கடந்த தினங்களில் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், இன்று அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை என 5 வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மாட்டுவண்டியில் வந்த வேட்பாளர்
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர் காளியம்மாள் போட்டியிடுகிறார். அவர் இன்று தனது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் புடைசூழ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தார். முன்னதாக நாம் தமிழர் கட்சியினர் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் பெருந்திரளாக கூடி, வேட்பாளர் காளியம்மாவை மாட்டு வண்டியில் அழைத்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வித்தியாசமான முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் அருகில் 100 மீட்டர் தொலைவில் வாகனத்தை நிறுத்திவிட்டு 4 பேருடன் மட்டும் ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்று மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏ.பி.மகாபாரதியிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ஆட்சியர் அலுவலகத்தில் நாமக - காவலர் இடையே சலசலப்பு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர் காளியம்மாவுடன் செய்தியாளர்களை சந்திக்க தயாராகினர். அப்போது இங்கு செய்தியாளர்களை சந்திக்க கூடாது என்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் நாம் தமிழர் கட்சியினரிடம் அறிவுறுத்தினார். அதற்கு நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் நேரம் முடிந்துவிட்டது இப்போது விதிமுறைகள் இல்லை என்று கூறியதால் காவலருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே சென்று செய்தியாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வில் இதில் மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாஸ், மண்டல செயலாளர் கலியபெருமாள், மாநில சுற்றுச்சூழல் துறை பாசறை துணைத் தலைவர் காசிராமன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.