மீனவர்களின் போராட்ட விவகாரம் - பேச்சுவார்த்தைக்கு வந்த எம்எல்ஏவிற்கு எதிர்ப்பு, நகர்மன்ற உறுப்பினருக்கு மதிப்பு...!
சீர்காழி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று ஐந்து நாட்கள் மீனவர்கள் நடத்தி வந்த போராட்டம் மயிலாடுதுறை நகர மன்ற உறுப்பினர் பேச்சுவார்த்தைக்கு பிறகு கைவிடப்பட்டுள்ளது.
மீனவர்களின் 20 ஆண்டு கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழ மூவக்கரை மீனவர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட கீழமூவர்கரை மீனவர் கிராமத்தில் அடிப்படை வசதிகளான ரேஷன் கடை, சமுதாயக்கூடம், மீன் ஏல கூடம், மீன் வலை பின்னும் கூடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை எனவும், கடலில் தூண்டில் வளைவு அமைத்துத் தர வலியுறுத்தியும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தேர்தல் புறக்கணிக்கப்பு
மேலும் ஒவ்வொரு முறையும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க மட்டுமே வருவதாகவும், வெற்றி பெற்ற பின்பு கிராமத்தை திரும்பி கூட பார்ப்பதில்லை என குற்றம் சாட்டியுள்ள இவர்கள், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர் அடித்து சுற்றுவட்டார கிராமங்களில் ஓட்டி உள்ளனர். மேலும் தங்களது கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், அதில் முதல் கட்டமாக மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கடந்த 3 -ம் தேதி கடலில் இறங்கி கையில் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடந்த போராட்டம்
அதனைத் தொடர்ந்து தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, உள்ளிட்டவைகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் நடைபெற உள்ள பாராளுமன்றம், சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களை புறக்கணிக்கத்து அனைவரும் வாக்களிக்காமல் தங்களது வீட்டிலேயே இருக்கப் போவதாகவும் கூட்டத்தில் முடிவெடுத்து தொடர்ச்சியாக கடற்கரையில் அமர்ந்து தர்ணாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
விரட்டி அடிக்கப்பட்ட எம்எல்ஏ
இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த சூழலில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி திமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வத்தை கிராமத்திற்கு வரக்கூடாது என மீனவ கிராம மக்கள் திரும்பி போ, போ என விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேலும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக கிராம மக்கள் தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். மீனவர்களின் போராட்டம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வந்தது.
இந்நிலையில் தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் அரசு அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னும் தொடர்ந்த நிலையில் ஐந்தாவது நாளகா சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா தலைமையில் நடைபெற்று, கூட்டத்தில் கீழமுவர்க்கரை கிராமத்தை பூர்வீகமாக கொண்ட மயிலாடுதுறை நகர்மன்ற உறுப்பினர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் முனைவர் மா.ரஜினி என்பவர் கிராமத்தலைவர்கள் திருவேங்கடம், வைரம்.வெங்கடேசன், கிராம பொது மக்கள், அரசுத்துறை அதிகாரிகள், ஆகியோருடன் கலந்து கொண்ட பேச்சு வார்த்தை நடத்தி சுமுக முடிவு ஏற்பட்ட செய்து, அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றி தருவதாக கோட்டாட்சியர் மூலம் உத்தரவாதம் பெற்றுத்தந்ததார். அதனை ஏற்று ஐந்து நாட்கள் நடைபெற்ற போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.