மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்தால் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் - ஜோதிமணி
ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் 100 நாள் வேலை திட்டத்திற்கு முழு உத்தரவாதம் இருக்கும். ரூ.400 சம்பளம் வழங்கப்படும்.
கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் கடும் வெயிலில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேங்கல், முனையனூர் உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்திற்கு வரும் வேட்பாளர் ஜோதிமணிக்கு பட்டாசு வெடித்தும், மாலை, பொன்னாடை அணிவித்தும், நீண்ட வரிசையில் நிற்கும் பெண்கள் ஆராத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.
அப்போது பேசிய ஜோதிமணி, ”காங்கிரஸ் ஆட்சியின்போது மாணவர்கள் கல்வி பயில கல்விக் கடன் கொடுக்கப்பட்டது. பாஜக ஆட்சியில் கல்விக் கடன் நிறுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட கல்விக் கடன்கள் திருப்பி கட்டப்படாததால் ஜப்தி நடவடிக்கைகளில் வங்கிகள் ஈடுபட்டுள்ளன. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்தால் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் 100 நாள் வேலை திட்டத்திற்கு முழு உத்தரவாதம் இருக்கும். ரூ.400 சம்பளம் வழங்கப்படும். விவசாய இடு பொருட்களுக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அத்தியாவசிய பொருட்களை அனைத்தும் விலை உயர்ந்து விட்டது. ஒரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் போராடி ரூ.500 கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்” என்றார். பரப்புரையில் ஈடுபட்டு இருக்கும்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ்க்கு வழிவிடுமாறு பொது மக்களை கேட்டு கொண்டார்.