Gayathri Raghuram: மோடி யாருன்னே ஊர் பக்கம் பலருக்கு தெரியாது.. பாஜகவை கிழித்தெடுத்த காயத்ரி ரகுராம்!
இப்போதுள்ள திமுக ஆட்சி மக்களுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியை அனைவரும் ரொம்பவே மிஸ் பண்ணுகிறார்கள்.
மத்திய அரசும், பிரதமர் மோடியும் நிறைய விஷயங்கள் செய்வதாக சத்தியம் செய்து அதனை நிறைவேற்றவில்லை என அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினரின் தேர்தல் பரப்புரையானது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனை போட்டி தேர்தலில் நிலவும் நிலையில் எந்த தொகுதியில் யார் வெல்வார்?, யார் கடும் போட்டியாளராக இருப்பார்? என்பது கணிக்க முடியாததாகவே உள்ளது.
இதனிடையே அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “நான் கடந்தமுறை பாஜகவுக்கு வாக்கு சேகரித்தேன். இந்த முறை அதிமுகவுக்கு மாறி வாக்கு கேட்கிறேன். ஏன் என கேட்டால் அதிருப்தி நிலவுவது தான். மத்திய அரசும், பிரதமர் மோடியும் நிறைய விஷயங்கள் செய்வதாக சத்தியம் செய்திருந்தனர். ஆனால் இன்றைக்கு வெளியே வந்த பிறகு பார்த்தோம் என்றால், ஏகப்பட்ட விஷயங்களில் எப்படி தமிழ்நாட்டை வஞ்சிக்கிறார்கள் என கேள்விப்பட்டோம்.
அதனால் அதிருப்தி என்பது மத்திய அரசு, மாநில அரசு மேலேயும் இருக்கிறது. மக்களுக்கு மோடி மீது இருந்த அபிப்ராயம் போய் விட்டது. ஊர் பக்கம் எல்லாம் சென்றால் மோடி யாருன்னே தெரியலன்னு சொல்றாங்க. தாமரையும், பாஜகவும் தெரியவில்லை. ஆனால் இரட்டை இலை என்றால் எல்லாருக்கும் தெரிகிறது. நான் அவர்களுக்கு சொல்வதை காட்டிலும் அந்த மக்கள் நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறார்கள். எம்ஜிஆர் நிறைய விஷயங்கள் செய்துவிட்டு சென்றிருக்கிறார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா செய்த விஷயங்கள் மக்கள் மனதில் அப்படியே இருக்கிறது. இப்போதுள்ள திமுக ஆட்சி மக்களுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியை அனைவரும் ரொம்பவே மிஸ் பண்ணுகிறார்கள். நல்லாட்சியை மிஸ் பண்ணுகிறார்கள். ஊடகத்தை எல்லாம் அவர்களின் கையில் வைத்துக் கொண்டு வெளியிடப்படும் கருத்துக்கணிப்பு எல்லாம் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். ஆனால் களத்தில் இருந்து பார்க்கும்போது, மக்கள் மனதில் என்ன இருக்குமோ அதுதான் எடுபடும் என சொல்வேன்.
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை எல்லாருக்கும் சென்று சேர்வதில்லை. ஆனால் அந்த திட்டத்தை வைத்து தான் தேர்தல் பரப்புரை செய்கிறார்கள். சில பேருக்கு தகுதி இல்லை என சொல்கிறார்கள். இதனால் பல பெண்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். தேர்தலுக்கு பின் மகளிர் உரிமைத்தொகை வழங்குவார்களா என்பதே பலருக்கும் கேள்விக்குறியாக உள்ளது. அதை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் உள்ளது” என கூறியுள்ளார்.