Lok Sabha Election 2024: அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்பு ; அதிமுக, நாம் தமிழர் எதிர்ப்பு
பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலையின் வேட்பு மனுவை முறைப்படி தாக்கல் செய்யவில்லை என்பதால், அதனை நிராகரிக்க வேண்டும் என அதிமுக, நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தினர்.
நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 20 ம் தேதி துவங்கி, நேற்று வரை நடைபெற்றது. இதில் முக்கிய அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, சுயேட்சை வேட்பாளர்களும் அதிக அளவில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். கோவை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், பாஜக வேட்பாளர் அண்ணாமலை உள்ளிட்ட 59 வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலணை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்க எதிர்ப்பு
இதில் கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி மற்றும் அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்களின் முகவர்கள் கலந்து கொண்டனர். அப்போது திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலையின் வேட்பு மனுவை முறைப்படி தாக்கல் செய்யவில்லை என்பதால், அதனை நிராகரிக்க வேண்டும் என அதிமுக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வலியுறுத்தினர். அண்ணாமலையின் வேட்பு மனுவில் படிவம் 26ல் வாக்கு இருக்கும் தொகுதியை தவறாக குறிப்பிட்டுள்ளதாக கூறி அதிகாரிகளிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வேட்பு மனு பரிசீலணையின் போது சலசலப்பு ஏற்பட்டது. அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க கோரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனுவும் அளித்தார். இருப்பினும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனுவை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.
அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
பாஜக வேட்பாளர் அண்ணாமலை முறையாக வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை எனவும், பிழைகள் இருந்த நிலையிலும் அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர். அதிமுக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிகாரிகள் காது கொடுத்து கூட கேட்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாகவும், அண்ணாமலையின் வேட்பு மனுவை நிறுத்தி வைப்பு கூட செய்யாமல் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டினர். மக்களை குழப்புவதற்காக திமுக வேட்பாளர் ராஜ்குமார் பெயரை கொண்ட நான்கைந்து பேரை பாஜகவினர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய செய்துள்ளதாகவும், அதற்கு வேட்பு மனு பரிசீலணையின் போது எதிர்ப்பு தெரிவித்தாகவும் திமுகவினர் தெரிவித்தனர். இதேபோல பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மொத்தம் 29 வேட்பாளர்கள் 44 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த நிலையில், 11 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 28 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. வேட்பு மனுக்களை திரும்ப பெற வருகின்ற 30 ம் தேதி கடைசி நாள் என்பதும், அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.