இந்தியா கூட்டணியில் தலைவரும் இல்லை. பிரதமர் வேட்பாளரும் இல்லை - சரத்குமார்
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து நடிகர் சரத்குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்தியா கூட்டணியில் தலைவரும் இல்லை, பிரதமர் வேட்பாளரும் இல்லை என கரூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடந்த பிரச்சாரத்தில் சரத்குமார் பேசினார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து நடிகர் சரத்குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திறந்த வேனில் நின்றவாறு பேசிய அவர், ”மக்களுக்கு என்ன திட்டங்களை செய்தோம் என்று எடுத்துச் சொல்லி வாக்கு கேட்கும் ஒரே கட்சி பாஜக. மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்கள் ஒவ்வொன்றையும், திமுக அரசு தான் கொண்டு வந்ததாக சொல்கிறது.
இந்தியா கூட்டணியில் தலைவரும் இல்லை. பிரதமர் வேட்பாளரும் இல்லை. 10 ஆண்டு கால ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தி வருபவர் பிரதமர் மோடி. ஆனால், திமுக ஆட்சியில் எதிலும் ஊழல் நடக்கிறது. இங்கிருந்த ஒருவர் (செந்தில்பாலாஜி) தற்போது சிறையில் உள்ளார். தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியது போல், பாதி பேர் ஜெயிலில் இருக்கிறார்கள், மீதி பேர் பெயிலில் இருக்கிறார்கள். மக்கள் மாற்றி யோசிக்க வேண்டிய நேரம் இது.
இந்திரா காந்தி ஆட்சியில் கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும்போது, கருணாநிதி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ரூ.30 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்யும் ஆட்சியாக திமுக உள்ளது. சாதாரண தொண்டன் திமுகவில் அமைச்சராக வர முடியாது. ஆனால், மோடி சாதாரண தொண்டனாக இருந்து, மூன்றாவது முறை முதல்வராக வந்தவர். அந்த சமயத்தில் ஒரு பத்திரிகைக்காக நான் அவரை பேட்டி எடுத்த பெருமை எனக்கு கிடைத்தது” என்றார்.