(Source: ECI/ABP News/ABP Majha)
Local body election | தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் ரத்தானது ஏன்? தெளிவான களத் தகவல் இதோ!
கடம்பூர் பகுதியில் தேர்தல் விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படாததால் கடம்பூர் பேரூராட்சிக்கான அனைத்து வார்டுகளிலும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் முதல்நிலை பேரூராட்சியில் மொத்தம் உள்ள 12 வார்டுகளில் 1,605 ஆண் வாக்காளர்கள் 1,690 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 295 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு, ஒவ்வோர் உள்ளாட்சித் தேர்தலின் போதும் ஊர் மக்கள் ஒன்று கூடிப் பேசி, கட்சி சார்பு இல்லாமல் சுயேச்சையாக போட்டியிடுவது வழக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டில் முதன்முதலாக அ.தி.மு.க., புதிய தமிழகம் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையிலும், சுயேச்சை வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.
கடம்பூர் பேரூராட்சியில் இதில் 1, 2 மற்றும் 11 வார்டுகளில் தலா இருவர் மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் திமுகவை சேர்ந்த ஜெயராஜ், சண்முகலட்சுமி, சின்னத்துரை ஆகியோர் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் முன்மொழிந்தவர்கள் கையெழுத்து போலியானது என தெரிய வந்ததால் கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் திமுகவினரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து சுயேட்சை வேட்பாளர்களான எஸ்.வி.எஸ்.பி.நாகராஜா, ராஜேஸ்வரி மற்றும் சிவகுமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவானது. மற்ற 9 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் உறுதியானது.
இந்நிலையில் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான திங்கள்கிழமையன்று பேரூராட்சி நோட்டீஸ் போர்டில் மாலை 6 மணி அளவில் 1 முதல் 6 வார்டுகளில் வேட்பாளர்கள் விலகல் ஏதுமில்லை என படிவம் 8 ஒட்டப்பட்டது. இதையடுத்து 1, 2 மற்றும் 11 வார்டுகளில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களான எஸ் வி எஸ் பி நாகராஜா, ராஜேஸ்வரி மற்றும் சிவகுமார் ஆகியோர் கடம்பூர் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் திரண்டு வந்து தாங்கள் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு செய்ய வேண்டும்.
அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடம்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேஷ் குமாரிடம் கோரிக்கை வைத்தனர். உரிய பதில் கிடைக்காத காரணத்தால் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அதிகாரிகளை 8 மணி நேரம் சிறைப்பிடித்தனர். இதனால் அப்பகுதியில் அசாதாரண சூழல் உருவானது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளை கண்டித்து மக்கள் தொடர்ந்து கண்டன கோஷமிட்டனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 3 டிஎஸ்பிக்கள் 5 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் கடம்பூரில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் கடம்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு நகல் நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது. அந்த அறிவிப்பில், மாநில தேர்தல் ஆணையத்தால் சொல்லப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும் தேர்தல் விதிமுறைகளையேம் பின்பற்றாத காரணத்தினால் கடம்பூர் முதல் நிலை பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் தேர்தல் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆணையிடப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காலை 10 மணி முதல் இரவு 1 மணி வரை நீடித்த 13 மணிநேரம் போராட்டம் முடிவுக்கு வந்தது.