Local Body Election | அதிமுக அரசின் 10 ஆண்டு சாதனைகளை மக்கள் தற்போது எண்ணிபார்க்கின்றனர் - ஓபிஎஸ்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் மகத்தான அமோக வெற்றி பெறும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, பர்கூர், தேன்கனிக்கோட்டை, காவேரிப்பட்டணம், கெலமங்கலம், நாகோஜனஅள்ளி, ஊத்தங்கரை ஆகிய 6 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 171 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 19ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 1,181 நபர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. அதில் ஓசூர் மாநகராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 379 மனுக்களில் 20 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 359 மனுக்கள் ஏற்கப்பட்டன. கிருஷ்ணகிரி நகராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 264 மனுக்களில் 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 259 மனுக்கள் ஏற்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக, பாஜக, பாமக என அனைத்து கட்சி கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஓசூர் மாநகராட்சி, கெலமங்கலம், தேன்கனிகோட்டை, பர்கூர் பேரூராட்சிகளில் வார்டு உறுப்பினருக்கான போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஓசூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பி.பாலகிருஷ்ண ரெட்டி தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதன் பிறகு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், அனைத்து மாநகராட்சிகளிலும் , நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் அனைத்து தமிழகத்தில் 10 ஆண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு புரட்சித்தலைவி அம்மா செய்த சாதனைகள் மக்கள் தற்பொழுது எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது திமுக ஆட்சி வந்ததிற்கு பின்னால் அவர்கள் சொன்ன வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்ற சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது, என்பதை மக்கள் எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் மகத்தான அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.