Local Body Election | சட்டப்பேரவை முடக்கப்பட்டால் அடுத்துவரும் தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வோம்- உதயநிதி
’’பாஜக இருக்கும் தைரியத்தில் பேசுகிறீர்கள், முடிந்தால் சட்டப்பேரவையை முடக்கி பாருங்கள்’’
நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நெல்லை டவுண் வாகையடி முனை பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார், அப்போது பேசிய அவர், நெல்லை சட்டமன்ற தொகுதி மக்கள் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஏமாற்றியதை போன்று மீண்டும் ஏமாற்ற மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
மக்களின் தற்போதைய எழுச்சியை பார்க்கும்போது தேர்தல் பரப்புரை தேவையில்லை என்றும் வெற்றி உறுதி என்று நினைப்பதாக தெரிவித்தார், மேலும் தமிழகத்திலும் சட்டப்பேரவை முடக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார், நீங்கள் முடக்கி தான் பாருங்களேன், யார் இருக்கிற தைரியத்தில் பேசுகிறார்கள், மத்தியில் பாஜக இருக்கும் தைரியத்தில் பேசுகிறீர்கள், முடிந்தால் சட்டப்பேரவையை முடக்கி பாருங்கள், சென்ற சட்டமன்ற தேர்தலில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 159 இடத்தில் ஜெயித்து வெற்றி பெற்றோம்,
அப்படி முடக்கப்பட்டால் மீண்டும் தேர்தல் வைத்து தானே ஆக வேண்டும், அப்போது குறைந்தது 200 இடங்களில் ஜெயித்து காட்டுவோம், தமிழக மக்கள் இப்போது தெளிவாக இருக்கின்றனர், சென்ற மே மாதம் கலைஞர் ஆட்சி அமைந்தது, இரண்டாம் அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பேரிடர் காலத்தில் பொறுப்பேற்று கொண்டது திமுக ஆட்சி, அப்போது முதல்வர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து ஊசி போடும் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம், கொரோனா முதல் அலையில் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஊசி வெறும் 1 கோடி ஆனால் திமுக பொறுப்பேற்று 9 மாதங்களில் போடப்பட்ட ஊசி 10 கோடி, இதுவே மிகப்பெரிய சாதனை.
இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவிலேயே முதல் முதலமைச்சர், ஒரே முதலமைச்சர் கொரோனா வார்டுக்குள்ளேயே சென்று மருத்துவம் சரியாக பார்க்கப்படுகிறதா என ஆய்வு செய்தவர், அதனால் தான் வட இந்தியாவில் எடுத்த கருத்துக் கணிப்பில் இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் பட்டியலில் முதல் இடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பதாக தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் என்னை பற்றி பேசி உள்ளார், கடந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதி நிறைய பொய் வாக்குறுதிகளை கொடுத்து விட்டு காணாமல் போய் விட்டார் என்று, என்னை எங்க வீட்டில் கூட தேடியது கிடையாது. நான்கு நாட்களாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன், அவர் எங்கு இருக்கிறார், சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு எதிராக தீர்மானம் போடும் அவருக்கு நேர் எதிரில் தான் உட்கார்ந்து இருந்தேன், சசிகலா காலில் விழுந்து முதல்வர் ஆனவர் கீழே தான் பார்ப்பாரே தவிர மேலே பார்த்து இருக்க மாட்டார்.
ஆட்சி அமைத்து 9 மாதம் ஆன நிலையில் முதல் மூன்று மாதங்கள் கொரோனா உடன் போராடி விட்டோம், கலைஞர் சொல்வதை போல சொல்வதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம் என செய்து காட்டியவர் கலைஞர், அவர் வழியில் வந்தவர் முக. ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி காலி செய்து விட்டனர், கொரோனா நிவாரணம் 4 ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தது போல ஆட்சி அமைந்ததும் இரண்டு தவணையாக கொடுக்கப்பட்டது.
முதற்கட்டமாக பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது, ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைக்கப்பட்டது. மகளிருக்கு இலவச பேருந்து வசதி செய்து தரப்படும் என சொன்னதை அதிமுக அதையெல்லாம் செய்யவே முடியாது என சொன்னார்கள். ஆனால் சொன்னதை எல்லாம் செய்து காட்டியவர் முதல்வர். சமையல், கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு எப்போது என பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, எட்டு மாதம் தான ஆகி உள்ளது, ஒவ்வொன்றாக தானே செய்ய முடியும் என தெரிவித்தார், இந்த பிரச்சார கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்