Local Body Election | ’சட்டமன்ற தேர்தல் வந்தால் அதிமுக தான் வெற்றி பெறும்’ - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
"திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. முக்கால்வாசி செய்து முடித்து விட்டோம் என்கின்றனர். ஆனால் திமுக அளித்த வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றவில்லை"
நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகராட்சி தேர்தலில் கவுண்டம்பாளையம், துடியலூர் ஆகிய பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”அதிமுக ஆட்சியில் கவுண்டம்பாளையம் துடியலூர் பகுதியில் செய்து நீண்ட கால கோரிக்கையான மேம்பால திட்டங்களை கொண்டு வந்தோம். இந்த மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறையும். குடிநீர் திட்டம், சாலை வசதி, மேற்கு புறவழிச்சாலை, மெட்ரோ ரயில் திட்டம் அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். இதனை யாரும் மறுக்க முடியாது. அதனால் தான் கோவை மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவினரை மக்கள் வெற்றி பெற வைத்தனர். திமுகவிற்கு பூஜ்யம் தான் கிடைத்தது.
தற்போது உள்ள திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. முக்கால்வாசி செய்து முடித்து விட்டோம் என்கின்றனர். ஆனால் திமுக அளித்த வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் கொடுத்து இருந்தால், தற்போது வரை 10 ஆயிரம் கொடுத்து இருக்க வேண்டும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அளித்த வாக்குறுதியை நம்பி தற்போது 8 மாணவ மாணவிகள் உயிரிழந்ததுள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பில் அதிமுக ஆட்சியில் 2500 ரூபாய் தரப்பட்டது. திமுக ஆட்சியில் 100 ரூபாய் கூட தரவில்லை. மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். திமுக ஆட்சி மக்கள் ஏற்றுக் கொள்ளாத ஆட்சி. ஆனால் சூப்பர் முதல்வர் என விளம்பரம் செய்கின்றனர்.
திமுக ஆட்சியில் அதிகாரிகள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காவல் துறையை திமுக தப்பாக பயன்படுத்துகின்றனர். காவல் துறையினரும் திமுகவிற்கு உடந்தையாக உள்ளன. இப்படியே இருந்து விடாது. தற்போது தேர்தல் வந்தால் திமுக அவுட். அதிமுக தான் வெற்றி பெறும். தேர்தல் நேரத்தில் மட்டுமே வரும் திமுகவினர் தேர்தல் முடிந்தால் சென்று விடுவார்கள். அதிமுக எம்.எல்.ஏ தான் மக்களுடன் இருந்து வேலை செய்வார்.
எம்.எல்.ஏ.விற்கு ஆண்டுதோறும் 3 கோடி தொகுதி நிதி வழங்கப்படுகிறது. அந்த நிதி விடுபட்ட பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீண்டும் நமது மேயர் வர வேண்டும். அப்போது தான் மக்களுக்கான திட்டங்களை கொண்டு வர முடியும். எனவே வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கட்சி வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்தார். இந்த பிரச்சாரத்தில் கவுண்டம்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் அருண்குமார் உட்பட பல்வேறு அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.