L Murugan: மத்திய அமைச்சரவையில் மூன்று தமிழர்கள்.. சர்ப்ரைஸாக வந்த மூன்றாவது நபர்!
மோடி தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்க உள்ள நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று பேருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளது. எல். முருகனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் மூன்று தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், எல். முருகன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சரவையில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து, புதிய அரசை அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்டவை, பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளன.
இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மோடியின் பதவியேற்பு விழா இன்று நடைபெற உள்ளது. மோடியின் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பது கேள்வியாக இருந்தது. தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.
எல். முருகனுக்கு வாய்ப்பு: மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்களுக்கு மோடியின் இல்லத்தில் தேநீர் விருந்தளிக்கப்பட்டது. இதில், பாஜக மூத்த தலைவர்கள் ஜெ.பி. நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களை தவிர கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான குமாரசாமி, ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் லலன் சிங், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான், அப்னா தால் (சோனேலால்) கட்சி தலைவர் அனுப்பிரியா படேல், ராஷ்ட்ரிய லோக் தள கட்சி தலைவர் ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்டோரும் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.
இவர்கள் தேநீர் விருந்தில் கலந்து கொண்டதால் இவர்கள் அனைவரும் மத்திய அமைச்சர்களாவது உறுதியாகிவிட்டது. மத்திய அமைச்சரவையில் மாநில வாரியாக, சாதி வாரியாக அனைவருக்கும் இடம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
புறக்கணிக்கப்பட்ட அண்ணாமலை: இப்படியிருக்க, தமிழ்நாட்டில் இருந்து யார்? யாருக்கு? வாய்ப்பளிக்கப்படும் என்பது எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது. அதற்கும் விடை கிடைத்துவிட்டது. மோடி அளித்த தேநீர் விருந்தில் தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், எல். முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எனவே, இவர்கள் அனைவரும் மத்திய அமைச்சர்களாவது உறுதியாகியுள்ளது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமனும் வெளியுறவுத்துறை அமைச்சராக எஸ். ஜெய்சங்கரும் பதவி வகித்தனர். கடந்த 2021ஆம் ஆண்டு, எல். முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை அமைச்சராகவும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராகவும் எல். முருகன் பதவி வகித்தார்.