Jammu Kashmir election: ஜம்மு&காஷ்மீர் தேர்தல் - ஆளுநர் அதிகாரத்தால் ஆட்சியை கைப்பற்றும் பாஜக? வெடித்த சர்ச்சை
Jammu Kashmir Assembly election 2024: தேர்தல் முடிவுகள் நெருங்கும் வேளையில் ஜம்மு&காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது.
Jammu Kashmir Assembly election 2024: ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில், 3 கட்டங்களாக பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
ஜம்மு &காஷ்மீர் தேர்தல்:
ஜம்மு & காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளின் முடிவுகள், பெரும்பாலும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாகவும் அல்லது தொங்கு சட்டசபை அமையலாம் என்றும் தெரிவிக்கின்றன.
எம்எல்ஏக்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம்:
இந்த சூழலில் தான் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநருக்கு உள்ள 5 உறுப்பினர்களை நியமனம் செய்யும் அதிகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துணைநிலை ஆளுநருக்கு இதுபோன்ற அதிகாரங்களை வழங்குவது மக்களின் ஆணையைத் தகர்க்கும் செயல் என, காங்கிரஸ் அதன் கூட்டணிக் கட்சியான நேஷனல் கான்பரன்ஸ் மற்றும் மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த அதிகாரம் பாஜகவுக்கு நன்மை பயக்கும் என்றும் வாதிடுகின்றன. தொங்கு சட்டசபையும் அமையலாம் என்ற தேர்தல் கருத்துக் கணிப்புகளால் அவர்களின் குரல் வலுப்பெற்றுள்ளது.
ஆட்சியை பிடிக்கும் பாஜக:
2024 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுள்ள பாஜக, ஜம்மு காஷ்மீரில் இதுவரை தனித்து ஆட்சியமைத்ததில்லை. 2014 தேர்தலுக்குப் பிறகு, அது PDP உடன் கூட்டணி ஆட்சியை அமைத்து. 2018 இல் கூட்டணியில் இருந்து வெளியேறியது. தொடர்ந்து 2019ல் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை பாஜக நீக்கியது மற்றும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதனால், ஜம்மு காஷ்மீரில் கடந்த பத்தாண்டுகளில் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இதுவாகும்.
துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரம், தொங்கு சட்டசபை அமையும் வேளையில் பாஜக ஆட்சி அமைக்க ஒரு வாய்ப்பினை வழங்கும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதாவது, ஆளுநர் பாஜகவிற்கு சாதகமான உறுப்பினர்களை நியமிப்பார் என குறிப்பிடுகின்றனர்.
ஏற்கனவே, புதிய எல்லை நிர்ணயத்தால் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரின் 47 இடங்களுக்கு இணையாக, ஜம்மு பிராந்தியம் 43 இடங்களைப் பெற்றுள்ளது. இது பாஜக பெரும்பான்மையை எட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக கருதப்படுகிறது. இந்த சூழலில், ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம், பாஜக கூடுதலாக ஐந்து எம்.எல்.ஏக்களை கொடுக்கக்கூடும் என்று அரசியல் கட்சிகள் கூறுகின்றன.
யார் அந்த 5 எம்.எல்.ஏக்கள்:
எல்லை நிர்ணய ஆணையம் யூனியன் பிரதேசத்தில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்த பிறகு, புதிய விதி துணைநிலை ஆளுநருக்கு ஐந்து உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை கொடுத்துள்ளது. அதில், இரண்டு பெண்கள், இரண்டு காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த (POK) ஒருவர் அடங்குவர். இதனால் சட்டப்பேரவையில் மொத்த இடங்களின் எண்ணிக்கை 95 ஆகவும், பெரும்பான்மை மதிப்பெண் 46ல் இருந்து 48 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. இந்த ஐந்து நியமன எம்எல்ஏக்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைப் போலவே முழு சட்டமன்ற அதிகாரங்களையும் சிறப்புரிமைகளையும் வைத்திருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தொங்கு சட்டசபை அமையும் வேளையில், மக்கள் தீர்ப்புக்கு எதிராகவும், பாஜகவிற்கு ஆதரவாகவும் அளுநர் செயல்பட்டால் நீதிமன்றத்திற்கு செல்வோம் என தேசிய மாநாட்டு கட்சி தெரிவித்துள்ளது.