5ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு.. தேர்தலில் கடமை தவறாத மேற்குவங்கம்.. மும்பை மீண்டும் சொதப்பல்!
காலை 7 மணிக்கு தொடங்கிய நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்தது.
![5ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு.. தேர்தலில் கடமை தவறாத மேற்குவங்கம்.. மும்பை மீண்டும் சொதப்பல்! India General Elections 2024 Phase 5 polling ends West Bengal registers highest voting percentage Mumbai woes continues 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு.. தேர்தலில் கடமை தவறாத மேற்குவங்கம்.. மும்பை மீண்டும் சொதப்பல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/20/06ebc123718e87c753b6abc1c53268131716209128405729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
5ஆம் கட்ட நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. மகாராஷ்டிரா, பீகார், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, ஜம்மு காஷ்மீர், லடாக் என 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று தேர்தல் நடந்தது.
5ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு:
5 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 57.40 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 73 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. எப்போதும் போல், மகாராஷ்டிராவில் குறைவான வாக்குப்பதிவே நடந்துள்ளது. அங்கு, 48.66 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை, பெங்களூரு போன்று மும்பையிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. மும்பை வடக்கில் 46.91 சதவிகித வாக்குகளும் மும்பை வடக்கு மத்திய தொகுதியில் 46.91 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. மும்பை வடகிழக்கு தொகுதியில் 48.67 சதவிகித வாக்குகளும் மும்பை வடமேற்கு தொகுதியில் 49.79 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது.
ஏமாற்றத்தை ஏற்படுத்திய மும்பைவாசிகள்:
மும்பை தெற்கில் 44.22 சதவிகித வாக்குகளும் மும்பை தென் மத்திய தொகுதியில் 48.26 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. ஒடிசாவில் 60.55 சதவிகித வாக்குகளும் உத்தர பிரதேசத்தில் 55.80 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது.
லடாக் யூனியன் பிரதேசத்தில் 67.15 சதவிகித வாக்குகளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 61.90 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 54.21 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 13 தொகுதிகளுக்கும் பீகாரில் 5 தொகுதிகளுக்கும் ஜார்க்கண்டில் 3 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடந்தது.
ஒடிசாவில் 5 தொகுதிகளுக்கும் மேற்குவங்கத்தில் 7 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. வரும் ஜூன் 1ஆம் தேதியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெறுகிறது.
வரும் ஜூன் 4ஆம் தேதி, மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த முறை போன்று இல்லாமல் இந்த முறை மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, காங்கிரஸ் - சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - உத்தவ் தாக்கரே சிவசேனா ஆகிய கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும் சவால் தந்து வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல, கர்நாடகாவில் பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு காங்கிரஸ் பெரும் சவாலாக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ராஜஸ்தானில் 7 முதல் தொகுதிகளில் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க: முடியாத வயதிலும் வாக்களித்த முன்னாள் பிரதமர்.. சிலிர்க்க வைக்கும் மன்மோகன் சிங்கின் ஜனநாயக உணர்வு!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)