களைகட்டும் காங்கிரஸ் தலைமையகம்! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தேர்தல் முடிவுகள்!
Lok Sabha Election Results 2024: டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தேர்தல் முடிவுகளுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி, ஜுன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அதில் 31.2 கோடி பெண் வாக்காளர்கள் உட்பட, 64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என வர்ணிக்கப்படுவதை மெய்ப்பிக்கும் விதமாக உலகிலேயே அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களித்த தேர்தலாக மாறியுள்ளது.
நாடே எதிர்பார்க்கும் தேர்தல் முடிவுகள்: இந்நிலையில், 542 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை (ஜுன் 4ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார்? மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? உங்கள் தொகுதியின் புதிய எம்.பி., யார்? தமிழ்நாட்டின் பெரும்பான்மை தொகுதிகளை வென்றது யார்? போன்ற பல கேள்விகளுக்கு நாளை விடை கிடைத்துவிடும்.
இந்திய மக்களவை தேர்தல் முடிவுகளை அறிய, உள்நாட்டு வாக்காளர்கள் மட்டுமின்றி சர்வதேச நாடுகளும் ஆவலுடன் காத்திருக்கின்றன. பாஜகவே ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்புகளை மறுத்துள்ள எதிர்க்கட்சிகள், இது மோடியின் கருத்துக்கணிப்பு என விமர்சித்துள்ளன. அதோடு, தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கின்றன. அந்த வகையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தேர்தல் முடிவுகளுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
#WATCH | Preparations are underway at the AICC headquarters in Delhi ahead of the counting of votes for #LokSabhaElections2024 tomorrow, 4th June pic.twitter.com/LIL3uxhWH7
— ANI (@ANI) June 3, 2024
குறிப்பாக, தேர்தல் முடிவுகளை அமர்ந்து பார்க்கும் வகையில் வெயில் தெரியாதவாறு கூரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியை போல் பா.ஜ.க.வும் தேர்தல் முடிவுகளுக்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளன.
லட்டுகளை தயார் செய்யும் பாஜக: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பாஜக அலுவலகத்தில் 10,000 லட்டுகள் தயாராகி வருகின்றன. வெற்றியை கொண்டாடும் விதமாக இனிப்புகளை செய்ய பா.ஜ.க. தலைவர்கள் ஆர்டர் கொடுத்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் பாஜக எம்எல்ஏ அதுல் ஷா கூறுகையில், "ஒவ்வொரு வெற்றியையும் மகிழ்ச்சியையும் இனிப்புகளுடன் கொண்டாடுவது நமது கலாச்சாரம்.
பிரதமர் மோடி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார். எனவே, இந்த வெற்றியை மக்களிடையே லட்டுகளை விநியோகம் செய்து கொண்டாடுவோம். இந்த முறை 'மீண்டும் மோடி அரசு, மூன்றாவது முறையாக மோடி அரசு' என அச்சிடப்பட்ட பெட்டியில் லட்டுகளை விநியோகம் செய்கிறோம். இங்கு, 10,000 லட்டுகள் தயார் செய்து வருகிறோம்" என்றார்.
காங்கிரஸ் கட்சியின் ஏற்பாடுகள் வீணாக போகிறதா? அல்லது பாஜகவின் ஏற்பாடுகள் வீணாக போகிறதா? என்பது நாளைக்குதான் தெரிய வரும்.