TN Urban Local Body Election 2022: 1 மணி நிலவரம்; எந்தெந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் அதிக, குறைந்த வாக்குப்பதிவு?
உள்ளாட்சித் தேர்தல் 1 மணி நிலவரப்படி, எந்தெந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் அதிக, குறைந்த வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் 1 மணி நிலவரப்படி, எந்தெந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் அதிக, குறைந்த வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல், வேட்புமனு பரிசீலனை, வேட்புமனு வாபஸ் பெறுதல், அதனைத் தொடர்ந்து வேட்பாளர்களின் தீவிரப் பிரச்சாரம் என தமிழகம் முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்டியது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு ஒரே கட்டமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்குத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதற்காக தமிழ்நாட்டு முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களில் மொத்தம் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சாமானிய மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்டங்களிலும் பதிவான வாக்குப் பதிவு சதவீதத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி, 35.34 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதில், கரூர் மாவட்ட பேரூராட்சியில் அதிகபட்சமாக 63.49 சதவீதம் வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்ச வாக்குப் பதிவாக ஈரோடு மாவட்ட பேரூராட்சியில் 36.50 சதவீதம் வாக்குப் பதிவானது.
அதேபோல திருச்சி மாவட்ட நகராட்சியில் அதிகபட்சமாக 55 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கன்னியாகுமரி மாவட்ட நகராட்சியில் குறைந்தபட்சமாக 31.99 சதவீதம் மட்டுமே பதிவானது.
கரூர் மாவட்ட மாநகராட்சியில் அதிகபட்சமாக 46.04 சதவீதம் வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்ச வாக்குப் பதிவாக சென்னை மாவட்ட மாநகராட்சியில் 23.42 சதவீதம் பதிவானது.
ஒட்டுமொத்தமாக நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 50.58 சதவீதம் வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்ச வாக்குப் பதிவாக சென்னை மாவட்டத்தில் 23.42 சதவீதம் பதிவானது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்