Chennai Corporation History | சென்னையின் முதல் பட்டியல் இன மேயர் யார்? இது சென்னை மேயர்களின் கதை!
சென்னை மாநகராட்சி மேயர் பொறுப்பை ஏற்கெனவே 2 பெண்கள் வகித்திருந்தாலும் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் மேயர் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு முதல் முறையாக உருவாகி உள்ளது
புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை உள்ளடக்கி வணிகம் செய்து வந்த ஆங்கிலேயர்கள் இப்பகுதியை மேலும் விரிவாக்கம் செய்து ஒரு நகர நிர்வாகத்தை அமைக்க திட்டமிட்டனர். இதற்கான அனுமதி இங்கிலாந்து மன்னரிடம் இருந்து கிடைத்த நிலையில் 1687 ஆம் ஆண்டு மெட்ராஸ் நகருக்கு என தனி நகர அமைப்பு உருவாவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 1688ஆம் ஆண்டு மெட்ராஸ் மாநகராட்சியாக உருவானது. ஒரு மேயர், 12 கவுன்சிலர்கள், 60 முதல் 100 பிரதிநிதிகளை கொண்ட அமைப்பாக இந்த நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் ஆங்கிலேயர்கள், சில பிரஞ்சு வணிகர்கள், போர்த்துகீசியர்களும் அங்கம் வகித்துள்ளதாக சான்றுகளில் காணமுடிகிறது. லண்டனிற்கு பிறகு மாநகராட்சி அந்தஸ்து பெற்ற நகரமாக மெட்ராஸ் மாறிய நிலையில் அதன் முதல் மேயராக நந்தேனியல் ஹிக்கின்சன் என்பவர் பொறுப்பேற்றார்.
மெட்ராஸ் மாநகரின் தலைமை பொறுப்பேற்ற சர் பிட்டி தியாகராயர்
1801 ஆம் ஆண்டு இந்த அமைப்பு முழுமையாக கலைக்கப்பட்டதால் மேயர், கவுன்சிலர் பொறுப்புகள் விலக்கிக்கொள்ளப்பட்டு மண்டல ஆணையர் மற்றும் தலைவர்களை கொண்ட புதிய நிர்வாக அமைப்பு முறை நடைமுறைக்கு வந்தது. 1919ஆம் ஆண்டு மாநகரத்தை நிர்வகிக்க ஒரு தலைவர் மற்றும் 50 கவுன்சிலர்கள் கொண்ட புதிய அமைப்பு முறை கொண்டு வரப்பட்டு இதற்கான முதல் தலைவராக நீதிகட்சித் தலைவர்களில் ஒருவரான சர் பிட்டி தியாகராயர் பொறுப்பேற்றார்.
இந்த பொறுப்பை ஏற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 1933ஆம் ஆண்டு மீண்டும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு மேயர் பொறுப்பு கொண்டு வரப்பட்டு மேயருக்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டது. மேயரின் உடை, இலச்சினை உள்ளிட்டவையும் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை மாநகரின் மேயராக எம்.ஏ.முத்தையா செட்டியார் தேர்வு செய்யப்பட்டார். 1933 முதல் 2011ஆம் ஆண்டு வரை நடந்த மறைமுக மற்றும் நேரடி தேர்தல்கள் வாயிலாக இதுவரை 49 பேர் சென்னை மாநகர மேயராக பொறுப்பு வகித்து உள்ளனர்.
மெட்ராஸ் மாநகரின் முதல் பெண் மேயர்
1957ஆம் ஆண்டு தாரா செரியன் என்பவர் சென்னை மாநகரின் முதல் பெண் மேயராக பொறுப்பேற்றார். இந்தியாவின் முதல் பெண் மேயர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 1958ஆம் ஆண்டு வரை இப்பொறுப்பினை இவர் வகித்தார். சென்னையின் இரண்டாவது பெண் மேயராக 1971ஆம் ஆண்டு திமுகவை சேர்ந்த காமாட்சி ஜெயராமன் பொறுப்பு வகித்தார்.
சென்னையை கைப்பற்றிய திமுக
விடுதலைக்கு பிறகு சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் 1959ஆம் ஆண்டு அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அப்போது நடந்த மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மை இடங்களை திமுக கைப்பற்றிய நிலையில், திமுகவின் முதல் சென்னை மாநகர மேயராக அ.பொ.அரசு பொறுப்பேற்றார்.
1970ஆம் ஆண்டு வரை 65 வார்டுகளுடன் சென்னை மாநகராட்சி இயங்கி வந்த நிலையில், 1973ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டதால் 1996ஆம் ஆண்டு வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்து. பின்னர் நடத்தப்பட்ட தேர்தலில் சென்னை மாநகராட்சியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
மேயர் பொறுப்பை உதறிய மு.க.ஸ்டாலின்
2001ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலிலிலும் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று மேயராக பொறுப்பேற்றாலும் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு அரசுப் பொறுப்புகளை வகிக்க முடியாது என்ற சட்டத்திருத்தத்தால் ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் பொறுப்பு வகித்து வந்த மு.க.ஸ்டாலின் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. பின்னர் 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை கராத்தே தியாகராஜன் பொறுப்பு மேயராக இருந்தார். 2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயராக மா.சுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டார்.
மேயரை பதவியை கைப்பற்றிய அதிமுக
2011ஆம் ஆண்டு நடந்த நேரடி தேர்தலில் வென்று சைதை துரைசாமி சென்னை மேயராக பொறுப்பேற்றார். சென்னை மாநகராட்சி வரலாற்றில் மேயர் பொறுப்பை அதிமுகவை சேர்ந்த முதன்முறையாக அலங்கரிக்கும் வாய்ப்பை அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தல் ஏற்படுத்தி கொடுத்தது.
மேயர் பொறுப்பை ஏற்க உள்ள பட்டியல் இன பெண்
2016ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத் தடை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நீண்ட காலத்திற்கு பிறகு தேர்தலை சந்திக்கிறது சென்னை மாநகராட்சி, சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள 200 வார்டுகளில் 84 வார்டுகள் பொதுப்பிரிவை சேர்ந்த பெண்களுக்கும் 16 வார்டுகள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் 16 வார்டுகள் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணுக்கே மேயர் பொறுப்பும் ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதன்முறையாக பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் மேயர் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இதன்படி பட்டியல் இனத்தவருக்கான பொதுப்பிரிவுக்கும் பட்டியல் இனத்தவருக்கான பெண்களுக்கும் ஒதுக்கப்படுள்ள 32 வார்டுகளில் ஏதேனும் ஒரு வார்டில் வெற்றி பெறும் பெண் ஒருவரே சென்னை மேயர் பொறுப்பை அலங்கரிக்க உள்ளார்.