Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - மொத்தம் பதிவான வாக்குகள் எவ்வளவு? களம் யாருக்கு சாதகம்?
Erode East Bypoll 2025: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு சதவிகித விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Erode East Bypoll 2025: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுமார் 2.27 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவை தொடர்ந்து, அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ஆளும் கட்சியான திமுக நேரடியாக களம் கண்டது. மற்ற பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலக, நாம் தமிழர் கட்சி சார்பில் மட்டும் வேட்பாளம் அறிவிக்கப்பட்டார்.இதனால், திமுகவின் சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உட்பட, மொத்தம் 46 வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் களமிறங்கினார். அவர்களில் தங்களுக்கான சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. சுமார் 2.27 லட்சம் பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.
படையெடுத்த வாக்காளர்கள்
வாக்குப்பதிவை ஒட்டி அந்த தொகுதியில் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்புடன், துணை ராணூவப்படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடி மையங்கள் சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டன. 9 வாக்குச்சாவாடி மையங்கள் பதற்றத்திற்கு உரியதாக அடையாளம் காணப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலையில் பனியின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் பொதுமக்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் நேரம் செல்ல செல்ல ஜனநாயக கடைமையை ஆற்ற வாக்காளர்கள் அதிகம் குவிந்தனர். இதனால், வாக்குசதவிகிதம் விறுவிறுவென உயர்ந்தது.
72 சதவிகிதம் பதிவான வாக்குகள்:
மாலை 5 மணி அளவில் 64.02 சதவிகிதம் அளவிலான வாக்குகள் பதிவானது. அதற்கு பின்பு வந்தவர்களுக்கு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு 6 மணி வரையிலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, வாக்குப்பதிவு நிறைவடைந்தபோது, மொத்தமுள்ள 2.27 லட்சம் வாக்காளர்களில் 72 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சில இடங்களை தவிர, பெரும்பாலும் தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்துள்ளது. கடந்த தேர்தலில் சுமார் 75 சதவிகிதம் வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை வாக்குப்பதிவு சரிவை சந்தித்துள்ளது. இது ஆளும் கட்சிக்கே சாதகமென கூறப்படுகிறது.
8ம் தேதி முடிவுகள்:
தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான, சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. வரும் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதில் தொடர்ந்து மூன்றாவது முறையாக திமுக கூட்டணி வெற்றி பெறுமா? அல்லது நாம் தமிழர் கட்சி ஆச்சரியம் அளிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

