Erode Election Result LIVE : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி! டெபாசிட்டை இழந்த நாம் தமிழர்
Erode East By Election Result 2025 LIVE Updates: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது, உடனடி களநிலவரங்களை அறிய ஏபிபி நாடு செய்தி தளத்துடன் இணைந்திருங்கள்.

Background
Erode East By Election Result 2025 LIVE: டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார்? என்பதற்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற கடந்த புதன்கிழமையில் தமிழ்நாட்டின் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:
ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானததைத் தொடர்ந்து, இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற முன்னணி கட்சிகளுடன் அறிமுக கட்சியான விஜய்யின் த.வெ.க.வும் புறக்கணித்த நிலையில், தி.மு.க. - நாம் தமிழர் கட்சிகள் மோதியது. இந்த தேர்தலில் மொத்தம் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகியது. மொத்தம் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை:
இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதியின் புதிய சட்டமன்ற உறுப்பினர் யார்? என்பதைத் தீர்மானிக்கும் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.
ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நடைபெறுவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் வாக்குகள் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த கல்லூரி வளாகத்தைச் சுற்றி 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு பதற்றமான பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வெற்றி யாருக்கு?
ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தலில் மொத்தம் 46 வேட்பாளர்கள் பங்கேற்றனர். அவர்களின் பிரதான வேட்பாளர்களாக தி.மு.க.வின் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமியுமே உள்ளனர். இந்த தேர்தலில் தி.மு.க.விற்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தது.
இந்த நிலையில், இன்று நடக்கும் வாக்கு எண்ணிக்கையில் முடிவுகள் தெரிந்துவிடும். பெரும்பாலும் காலை 11 மணிக்கே முன்னிலை வாய்ப்பை வைத்து வெற்றி பெறப்போவது யார்? என்று தெரிந்து விடும். தி.மு.க.வினர் தற்போது முதலே இந்த வெற்றியை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
சீமானுக்கு சறுக்கலா? வளர்ச்சியா?
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க தி.மு.க.வே நேரடியாக களமிறங்கியுள்ளது. சீமான் பெரியாரைப் பற்றி தெரிவித்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் விமர்சனத்தையும், பரபரப்பையும் உண்டாக்கிய நிலையில் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றிருப்பதால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் பாதிப்பைச் சந்திக்குமா? அல்லது வளர்ச்சியை பெறுமா? என்பதை இன்றைய தேர்தல் முடிவில் அறிந்து கொள்ள முடியும்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவெரா திருமகனார் காலமானதைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் கடந்தாண்டு இறுதியில் உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்போது இந்த இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் தொடங்கியது. சரியாக காலை 7:30 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணியான தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 246 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்த வாக்கு எண்ணிக்கையில் முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் நாம் தமிழர் கட்சி நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது
தொடர்ந்து முன்னிலையில் திமுக:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் 24,712 வாக்குகள் பெற்று முதலிடத்திலும் நாதக இரண்டாம் இடத்திலும் நோட்டாவுக்கு மூன்றாம் இடத்தில் உள்ளது.
6 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையி திமுக 43427 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 9152 வாக்குகளை பெற்றார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி! டெபாசிட்டை இழந்த நாம் தமிழர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 1 லட்சத்து 14 ஆயிரத்து 439 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட் இழந்தார்.
உறுதியான வெற்றி! பட்டாசு வெடித்தும், ஆட்டம் போட்டும் கொண்டாடும் தி.மு.க.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் அவர்கள் பட்டாசு வெடித்தும், நடனம் ஆடியும் கொண்டாடி வருகின்றனர்.





















