Erode East By Election: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்: நடைமுறைக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்..!
Erode East By Election: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 11-ஆம் தேதி அறிவித்தது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல், எதிர்வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மூன்று மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அத்துடன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது. மேலும் வருகின்ற மார்ச் மாதம் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியினைப் பொறுத்தவரைமொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு நகராட்சி ஆணையராக உள்ள சிவகுமார், தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியினைப் பொறுத்தவரையில், 238 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த 238 வாக்குச்சாவடி மையங்களிலும் 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
காலியாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால், தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனால், ஈரோடு மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை அரசு வெளியிட முடியாது. அங்கு பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். பொருட்கள், பணம் கொண்டு செல்லும் போது உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்ல வேண்டும், பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசியல் கட்சித் தலைவரகளின் சிலைகள் மூடப்பட்டுள்ளன. கட்சிக் கொடிக் கம்பங்களில் இருந்த கொடிகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. மேலும், கட்சி சுவர் விளம்பரங்கள் மாநகராட்சி நிர்வாகத்தால் அழிக்கப்பட்டு வருகின்றன. இடைத்தேர்தல் என்பதால் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் பணப்புழக்கம் அதிகம் இருக்க வாய்ப்பு இருப்பதால் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.