“உரிமையை பறிச்சவங்களுக்கு ஓட்டு போடாதீங்க!" – திமுக கூட்டணிக்கு எதிராக எகிறும் இபிஎஸ்-ஸின் ஆவேசம்
“எல்லாவற்றையும் நிறைவேற்றித் தருவோம். நமது வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்….அதிமுக வின்னிங்…. நல்லாட்சி கம்மிங்…” - திருச்செங்கோட்டில் இபிஎஸ் பிரச்சாரம்

“பெண்கள் உரிமையைப் பறித்த ஸ்டாலின் கூட்டணியைத் தோற்கடியுங்கள்” என்று திருச்செங்கோட்டில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி சீற்றமாக தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சூறாவளி சுற்றுப்பயணம் செய்துவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அத்திப்பாளையம், திருசெங்கோடு - பரமத்தி சாலையில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது இபிஎஸ் பேசியதாவது: “கடுமையான வெயில் நேரத்திலும் எதிரியை வீழ்த்துவதே எங்கள் லட்சியம் என்று இங்கு குழுமியிருக்கும் அனைவரின் பாதம் தொட்டு வணங்குகிறேன். நாமக்கல் மாவட்டம் அதிமுக கோட்டை. நம் கூட்டணி இயற்கையானது, வலிமையானது. அதிமுக சார்பில் ஏற்கனவே நான்குமுறை எம்.எல்.ஏ, அமைச்சராக இருந்த தங்கமணி குமாரபாளையத்தில் நிற்கிறார். பரமத்திவேலூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ சேகர், திருச்செங்கோடு தொகுதியில் சந்திரசேகர், சேந்தமங்கலம் மலைவாழ் மக்கள் பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ சந்திரசேகரன், நாமக்கல் தொகுதியில் ஸ்ரீதேவி மோகன் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்கள். ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அனைவருக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். நம் கூட்டணியில் பாஜக சார்பில் ராசிபுரம் தொகுதியில் டாக்டர் பிரேம்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் டாக்டர், மக்களிடம் எளிமையாக பழகுபவர் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க அவருக்கு வாய்ப்புக் கொடுங்கள். அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். எனக்கு எம்.பி என்ற அடையாளம் கொடுத்த மாவட்டம் இது, திருச்செங்கோடு எம்.பி.யாக இருந்தேன், இன்று நாமக்கல் எம்.பி. தொகுதியாகிவிட்டது. எனக்கு வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு நன்றி. அம்மா இருக்கும்போதும், அதன் பின்னரும் அதிக திட்டங்கள் பெற்ற மாவட்டம் நாமக்கல். ஆறு தொகுதிகளிலும் தேவையான திட்டங்களை கொடுத்திருக்கிறோம்.

திமுகவில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு. தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மூலைமுடுக்கெல்லாம் கஞ்சா கரை புரண்டு ஓடுகிறது. போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது தமிழ்நாடு. இதனால், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பாதிப்பு. போதை ஆசாமிகளால் தான் குற்றங்கள் அதிகமாக நடக்கிறது. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. திமுக அரசால் தடுக்க முடியவில்லை. ஏனென்றால், திமுகவினர் துணை நிற்கிறார்கள். கல்வியில் சிறந்த நாமக்கல் மாவட்டத்தில் மோசமான நிலை உருவாகிவிட்டது.
திமுக ஆட்சியில் 24 ஆயிரம் பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளது, அதில் 18 ஆயிரம் சிறுமிகள் பாதிப்பு, 6999 வழக்குகள் சிறுமிகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் என்று சமூகநலத்துறை அமைச்சரே சொல்லியிருக்கிறார். போக்சோ வழக்கு என்றால் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் வழக்கு. இந்த ஆட்சி நல்லாட்சியா? அதுக்கு 84 கோடி ரூபாய் நிவாரணம் கொடுத்ததை பெருமையாகப் பேசுகிறார்கள். நிவாரணம் கொடுத்தால் சரியாகிவிடுமா? 18 ஆயிரம சிறுமிகளின் வாழ்க்கை என்னாவது?
அப்பா என்றால் என் செவிக்கு மகிழ்ச்சியாகிறது என்கிறார் ஸ்டாலின். பெண் பிள்ளைகள் பாலியல் சீண்டலில் கதறும்போது அப்பாவுக்குக் காது கேட்காதா? ஒவ்வொரு பெற்றோரும் சிந்திக்க வேண்டும். நம் குழந்தை பாதுகாப்பாக இருந்தால் தான் நாடு வளம் பெறும். சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. தமிழ்நாடு தலை குனிந்துவிட்டது. இந்த பாலியல் சீண்டல்களால் தலை நிமிர்ந்து நிற்கவில்லை, தொங்கி நிற்கிறது.
நாளைக்கே என்னை எதிர்த்துப் பேசுவார், அவதூறு பரப்புகிறேன் என்பார். பத்திரிகையில் வந்த செய்தியைத் தான் பேசுகிறோம். 2 வயது குழந்தை கிருஷ்ணகிரியில் பாலியல் கொலை. குமாரபாளையத்தில் 7 வயது சிறுமிக்கு ஒரு கொடூரன் பாலியல் வன்கொடுமை செய்தான். தங்கமணி நேரில் சென்று விசாரித்தார். இதையெல்லாம் சொன்னால் ஸ்டாலினுக்குக் கோபம் வருகிறது. இந்த தொகுதியில் கள்ளச்சாராயம், போதை மாத்திரை விற்கிறது. திருச்செங்கோடு தேவனாங்குறிச்சியில் திமுக நிர்வாகி போலி மதுபான தொழிற்சாலை வைத்திருந்தார். திமுக கட்சிக்காரரகள் அவரவர் லெவலுக்குத் தகுந்த மாதிரி நடத்துகிறார்கள். இவர்களுக்குப் பெரிய பொறுப்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும், அவர் பெரிதாக கொள்ளை அடிக்கிறார். ஒரு பக்கம் கள்ளச்சாரயம், ஒரு பக்கம் மதுபானத் தொழிற்சாலை, ஒரு பக்கம் அரசு டாஸ்மாக்கிலேயே கொள்ளை அடிக்கிறான்.
காவல்துறையைக் கண்டு குற்றச்செயல் செய்பவர்களுக்குப் பயமில்லை, ஏனென்றால், திமுககாரர்கள் துணை நிற்கிறார்கள். முன்பு தங்கம் நிலவரம் வருவது போன்று, இப்போது கொலை நிலவரம், பாலியல் நிலவரம், போதை நிலவரம் தான் வருகிறது. இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா? .

தமிழ்நாட்டில் வறுமை என்ற நிலையே இல்லை என்கிறார் ஸ்டாலின். இது உண்மையா? அப்புறம் ஏன் கிட்னியை விற்கிறார்கள்? ஏழைகளின் வறுமை கொடுமையைப் பயன்படுத்தி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மருத்துவமனையில் கிட்னியை அபகரித்தனர். திமுக அரசே குழு அமைத்து ஆய்வு செய்து உண்மை என்று சொல்லியது. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. கிட்னி புரோக்கரை மட்டும் தான் கைதுசெய்தனர். மருத்துவமனை தான் தவறு செய்தது, அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. கமிஷனுக்காக நடந்தது என்று புரோக்கரை கைது செய்து கேஸை மூடிவிட்டனர். திமுககாரர்கள் நடத்தும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்ளுங்கள், உறுப்பு இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். குமாரபாளையத்தில் ஒரு பெண்மணிக்கு கிட்னிக்கு பதிலாக கல்லீரலை எடுத்துவிட்டனர். எவ்வளவு கொடுமை, இப்படிப்பட்ட ஆட்சி வேண்டுமா? வறுமையைப் பயன்படுத்தி உறுப்புகளை திருடும் அரசு தேவையா? அந்த எம்.எல்.ஏ, ’நான் ரோல்ராய்ஸ் கார் வாங்க வேண்டும் என்றால் ஊரில் உள்ளவர்கள் கிட்னியை எல்லாம் கழற்றினால் தான் வாங்க முடியும்’ என்று பேசுகிறார். இப்படிப்பட்ட அயோக்கியர்கள் நாட்டை ஆளலாமா? எவ்வளவு பணத்திமிர், வாய்க்கொழுப்பு. ஆசை இருக்கலாம், ஆனால் இப்படி பேராசை பிடித்து பேய் மாதிரி அலையக்கூடாது. தரம் தாழ்ந்து இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுபவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குங்கள்.
இது வேளாண்மை நிறைந்த பகுதி, லாரி தொழில், ரிக் தொழில், விசைத்தறி, கைத்தறி தொழில், ஸ்பின்னிங் மில், இப்படிப்பட்ட தொழில்கள் எல்லாம் இந்த ஆட்சியில் முடங்கிவிட்டது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விசைத்தறிகள் எல்லாம் எடைக்குப் போடும் அவல நிலை வந்துவிட்டது. கைத்தறிக்கும் அதே நிலைதான். அதிமுக ஆட்சியில் கைத்தறி, விசைத்தறி சிறந்து விளங்கும். கைத்தறி நெசவாளர்களுக்கு இப்போது 300 யூனிட் விலையில்லாமல் கொடுக்கிறோம் அது 450 யூனிட்டாக உயர்த்தப்படும், விசைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது 1000 யூனிட் விலையில்லாமல் கொடுக்கிறோம் அது 1400 யூனிட்டாக உயர்த்தப்படும். நிலைக்கட்டணம் குறைக்கப்படும். ஏழை நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். ஏற்கனவே அதிமுக ஆட்சியில், கைத்தறி துணிகள் அதிகமாக நெய்யப்பட்டு தேக்கமடைந்தபோது 350 கோடி ரூபாய் மானியம் கொடுக்கப்பட்டது. 65 மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும்.
கல்லூரிகள், பள்ளிகள் நிறைய திறந்தோம். திமுக 200 அரசு பள்ளிகளை மூடியது. அதிமுக அரசு கல்வி கற்கும் எண்ணிக்கையை உயர்த்தினோம். திமுக அமைச்சரோ, நீங்க இஷ்டத்துக்கு பள்ளிக்கூடத்தை திறந்துவிட்டீர்கள், எங்களால் நடத்த முடியவில்லை, அதனால் மூடுகிறோம் என்றார். ஆசிரியர்கள் கிடையாது, உதவியாளர் கிடையாது என்று பள்ளிகளை மூடுகிறார்கள்., நாடு போகும் போக்கைப் பார்த்தால் மீண்டும் ஆடு, மாடு மேய்க்கும் நிலை வந்துவிடும். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொடுத்தோம். நாமக்கல்லில் 400 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்தோம். சட்டக்கல்லூரிக்கு நான் இருக்கும்போது அரசாணை வெளியிட்டேன், திமுக வந்து அடிக்கல் நாட்டியது. கல்லூரி திறந்ததின் விளைவு கல்வி கற்போறின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 2016ம் ஆண்டு அம்மா முதல்வராக இருந்தபோதும், அடுத்ததாக 2021ம் ஆண்டு நான் முதல்வராக இருந்தபோதும் என ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும்.
ஸ்டாலின் பொற்கால ஆட்சி கொடுப்பதாகச் சொல்கிறார். விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய் எலலம் உயர்ந்துவிட்டது. நாமக்கல் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம். அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் அடுப்பு எரியும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத அரசு தேவையா? அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது, விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வைக்கப்பட்டது. அதன்மூலம், விலைவாசி உயரும் சமயங்களில் அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. ரேஷன் கடையில் கொடுக்கப்படும் அரிசி தரமில்லை என்ற தகவல் வருகிறது. அதனால் நவீன அரிசி ஆலையில் உற்பத்தி செய்து கடையில் கிடைக்கும் அரிசி போன்றே ரேஷன் கடையில் கொடுக்கப்படும். விலையில்லா அரிசி கடை அரிசி போன்று கொடுப்போம். எத்தனையாயிரம் கோடி செலவானாலும் கொடுப்போம். ரேஷன் கடையில் இதுவரை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கும் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.
அம்மா இல்லம் திட்டம் மூலம், வீடில்லாத அனைவருக்கும் அரசு சார்பில் நிலம் வாங்கி, அற்புதமான கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். பட்டியலின, ஆதிதிராவிடர், மலைவாழ் மக்கள் வாரிசுகள் தனிக்குடித்தனம் சென்றாலும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். திமுக ஆட்சியில் மின்கட்டணம் கடுமையான உயர்ந்துவிட்டது. வீடுகளுக்கு முதலில் 52% உயர்த்தினார்கள். ஆண்டுக்கு 5% என மூன்றாண்டுகளில் 15% உயர்த்தி, இப்போது 67% ஆக உள்ளது. கடைக்கு பீக் ஹவர் என்ற பெயரில் டபுள் சார்ஜ் வசூலிக்கிறார்கள். வீட்டுவரி 100% உயர்ந்துவிட்டது, ஆண்டுக்கு 6% உயர்வு என்று இரண்டு வருடத்தில் 12% ஏற்றிவிட்டனர். கடைக்கு வரி 150% உயர்ந்துவிட்டது, கடைக்கும் ஆண்டுக்கு 6% உயர்வு. போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்டுவிட்டனர். ஒருபக்கம் விலைவாசி உயர்வு, ஒருபக்கம் மின்கட்டணம் வரி உயர்வு. கட்டுமானப் பொருட்கள் விலையும் உயர்வு. கட்டுமானப் பொருட்கள் விலை உயரும்போது அது அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்பட்டு கட்டுப்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நானும் சட்டமன்றத்தில் இதுபற்றி கேட்டேன், எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஆட்சியில் நிஜத்தில் யாரும் வீடே கட்டமுடியாது.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் மசோதாவைதோற்கடித்ததாக பேசுகிறார் ஸ்டாலின், திராணியற்ற முதல்வர், என்னவென்றே தெரியாத பொம்மை முதல்வர். மத்திய அர்சு என்ன கொண்டுவந்தது பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு, அந்த மசோதாவை தோற்கடித்த கட்சி திமுக, உங்களுக்கு கிடைத்த உரிமையை தடுத்தது காங்கிரஸ், திமுக கட்சி. திமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா?
அம்மா 1998ல் பாஜகவோடு கூட்டணியில் இருந்தபோது நான் திருச்செங்கோடு எம்பியாக இருந்தேன், அம்மா கோரிக்கையை ஏற்று பிரதமர் வாஜ்பாய் கோரிக்கையை ஏற்று, தம்பிதுரை சட்டத்துறை அமைச்சராக இருந்தார் அவர்தான் தாக்கல் செய்தார். அப்போது முலாயம்சிங் எம்பி மசோதாவை பிடுங்கி கிழித்து எறிந்தார். பெண்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று நினைக்கும் கட்சி அதிமுக. திமுக கூட்டணி கட்சிகளுக்கு பெண்களின் இடஒதுக்கீட்டில் இஷ்டமில்லை. நாம் இருக்கும்பொதுதான் உள்ளாட்சியில் 33% அப்புறம் 50% கொண்டுவந்தோம். இந்த மசோதாவை தாக்கல் செய்தது அதிமுக. பிரதமர் மோடி அவர்கள் நம்மிடம் பேச்சுவார்த்தை நடத்தினார், நாமும் ஏற்றுக்கொண்டோம், மசோதா கொண்டுவந்தார் திமுக எதிர்த்து ஓட்டு போட்டு தோற்கடித்தது திமுக கூட்டணி. பெண்கள் மன்னிப்பார்களா? பாராளுமன்ற தொகுதி வரையறை, மாற்றி அமைக்கிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் முறைப்படுத்துகிறார்கள். ஸ்டாலின் என்ன சொன்னார்..? மக்கள் தொகை அடிப்படையில் பிரித்தால் தமிழ்நாட்டுக்கு குறைந்துவிடும் என்றார், அதனால் அதை கைவிட்டுவிட்டு, ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு எம்பி எண்ணிக்கையோ, அதற்குத் தக்க உயர்த்தினார்கள், தமிழ்நாட்டில் 39 என்று இருப்பதை 59 ஆக உயர்த்த இருந்தனர். உள்துறை அமைச்சர் தமிழ்நாடு பாதிக்காது என்றார், 7.18% ஆக இருப்பதை 7.23% ஆக உயர்த்த இருந்தனர். மத்திய அரசு நமக்கு சாதகமாகத்தான் இருந்தது. ஆனால், அந்த மசோதாவை தோற்கடித்ததாக வீரவசனம் பேசுகிறார் ஸ்டாலின்.
நாட்டு மக்களை தோற்கடித்துவிட்டீர்கள் ஸ்டாலின் அவர்களே, மக்களின் கனவுகளை, பெண்களின் கனவை சிதைத்துவிட்டீர்கள். நாடாளுமன்றம், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை தடுத்து நிறுத்திய திமுக காங்கிரஸ் கூட்டணிக்குத் தகுந்த பாடத்தைப் புகட்டுங்கள். நாடாளுமன்ற மறுவரையறையில் நாம் நினைத்ததை மத்திய அரசு கொண்டுவந்தது. தமிழ்நாட்டில் குறைந்த இடம் என்று நினைத்தார் ஸ்டாலின். ஆனால் 59 என்று அறிவித்து. ஸ்டாலின் முகத்தில் கரி பூசிவிட்டனர். பெண்களின் உரிமையை பறித்துவிட்டார் ஸ்டாலின். இதற்கு ஒவ்வொரு பெண்களும் திமுகவுக்கு தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும். பல ஆண்டுகளாக ஏரி, குளம், குட்டை தூர் வாரவில்லை. அதிமுக ஆட்சியில் தூர் வாரி விவசாயிகள் வண்டல் மண் அள்ளிக்கொண்டு இருந்தனர், திமுக அதை ரத்துசெய்துவிட்டது. அதிமுக ஆட்சி வந்ததும் விவசாயிகள் வண்டல மண்ணை அள்ளிக்கொள்ளலாம்.

திருச்செங்கோடு பகுதியில் இருக்கும் காவிரியில் இருந்து நீரேற்றுப் பாசனம் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசனம் பெறுவதற்கு உதவியாக இருந்தது அதிமுக அரசு. ஆனால், அதிமுக ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை என்கிறார் ஸ்டாலின். தில்லு இருந்தால் நான் கேட்பதற்குப் பதில் சொல்ல வேண்டும். நாமக்கல் கோரிக்கை பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் நகராட்சி கூட்டுக்குடிநீர் திட்டம் 250 கோடியில் நிறைவேற்றம்; திருச்செங்கோடு, குமாரபாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம்; ராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம்; நெடுஞ்சாலை துறை திட்டங்கள் என்று தங்கமணி கேட்டதெல்லாம் வாரிக் கொடுத்தோம். நாமக்கல் முதல் திருச்செங்கோடு வரை நான்கு வழிச்சாலை, இருவழிச்சாலை, காவிரியாற்றின் குறுக்கே பாலம், ரயில்வே மேம்பாலம், 3 கொள்ளிமலை சாலைகள், நாமக்கல் முசிறி தேசிய நெடுஞ்சாலை, மேட்டூரில் இருந்து செல்லும் உபரிநீரை தடுக்க நஞ்சைப்புகழூரில் 400 கோடியில் தடுப்பணை, ராஜவாய்க்கால் சீரமைப்பு, மருத்துவக்கல்லூரி, சட்டக்கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, புதிய தாலுகா அலுவலகம், பட்டா வழங்க ஆணை, இளைய நாயக்கர் மன்னருக்கு மணிமண்டபம், நாமக்கல் - திருச்செங்கோடு புறவழிச்சாலை, அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குப் பாதை என்று இத்தனை திட்டங்கள் கொடுத்திருக்கிறோம். அதிமுக ஆட்சியின் திட்டங்களை பட்டியலிட்டுவிட்டேன். திமுகவுக்கு தில்லுதிராணி இருந்தால் இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டும். இதைக் கொடுத்து… (கை விரல்களில் சைகை காட்டுகிறார்) நான் வெளிப்படையாக சொல்ல முடியாது. இதைக் கொடுத்து, கொள்ளையடித்த பணத்தை வைத்து ஜெயித்துவிடலாம் என்று நினைத்தால் மக்கள் கரி பூசிவிடுவார்கள். திட்டங்கள் தான் நிலைக்கும், வரலாறு பேசும், உங்க பேரன் காலத்தில் கூட பேசும். அப்படிப்பட்ட திட்டங்களை அள்ளிக்கொடுத்திருக்கிறோம்.
அதிமுக 297 வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறோம். திமுக ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்பத் தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் ஃப்ரிட்ஜ் வழங்கப்படும். சரியான நேரத்திற்கு பணியிடங்களுக்குச் செல்வதற்கும், படிக்கச் செல்வதற்கும் ஏதுவாக, 5 லட்சம் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வாங்க, தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவியாக 3 சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும். பொங்கல் தொகுப்போடு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நகரப்பகுதியில் சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு கடனும் தள்ளுபடி செய்யப்படும். புதிதாக 2 லட்சம் ரூபாய் வரை எவ்வித ஜாமீனும் இல்லாமல் கடன் வழங்கப்படும். மரம் ஏறும் தொழிலாளர்கள் தவறி விழுந்து உயிரிழந்தால் குடும்பத்துக்கு 20 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். உபகரணங்கள் விலையில்லாமல் வாங்கிக் கொடுக்கப்படும்.
கட்டிடத் தொழிலாளர்கள் உயிரிழப்பு ஏற்பட்டால் 25 லட்சம் நிவாரணம், படுகாயமடைந்தால் சிகிச்சை செல 2 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும். பதிவு செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். பட்டப்படிப்பு படித்து பதிவுசெய்த இளைஞர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாயும், +2 வரை படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயமாக தொழில் தொடங்கினால் கூட்டுறவு சங்கத்தின் மூலம் தேவையான வட்டியில்லா கடன் வழங்கப்படும். கேபிள் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும். இப்போது 200 ரூபாய் வாங்குவது 100 ரூபாயாக குறைக்கப்படும். எல்லாவற்றையும் நிறைவேற்றித் தருவோம். நமது வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்….அதிமுக வின்னிங்…. நல்லாட்சி கம்மிங்…” என்று பேசி முடித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்


















