TN Urban Election Results 2022 : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொகுதியில் திமுக அபார வெற்றி ; அதிமுக படுதோல்வி
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 7 பேரூராட்சிகளிலும் ஒற்றை இலக்க இடங்களை மட்டுமே பிடித்து அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் பெரும்பான்மையான இடங்களில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் கோட்டை என கருதப்படும் கோவை மாவட்டத்திலும் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளும் திமுக வசமாகியுள்ளது. மொத்தம் உள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகள் திமுக கைப்பற்றி அசத்தியுள்ளது. வெள்ளலூர் பேரூராட்சியில் மட்டும் அதிமுக வென்றுள்ளது. மோப்பிரிபாளையம் பேரூராட்சியை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொகுதியான தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 7 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் தாளியூர், புலுவப்பட்டி, பேரூர், வேடப்பட்டி, ஆலாந்துறை, தென்கரை, தொண்டாமுத்தூர் ஆகிய 7 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. 7 பேரூராட்சிகளிலும் ஒற்றை இலக்க இடங்களை மட்டுமே பிடித்து அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.
தாளியூர் பேரூராட்சியில் அதிமுக 2 இடங்களில் வென்ற நிலையில், திமுக 13 இடங்களை கைப்பற்றியுள்ளது. புலுவப்பட்டி பேரூராட்சியில் அதிமுக 3 இடங்களில் வென்ற நிலையில், திமுக 11 இடங்களை கைப்பற்றியுள்ளது. பேரூர் பேரூராட்சியில் அதிமுக 2 இடங்களில் வென்ற நிலையில், திமுக 12 இடங்களை கைப்பற்றியுள்ளது. வேடப்பட்டி பேரூராட்சியில் அதிமுக 2 இடங்களில் வென்ற நிலையில், திமுக 13 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆலாந்துறை பேரூராட்சியில் அதிமுக 3 இடங்களில் வென்ற நிலையில், திமுக 10 இடங்களை கைப்பற்றியுள்ளது. தென்கரை பேரூராட்சியில் அதிமுக 2 இடங்களில் வென்ற நிலையில், திமுக 12 இடங்களை கைப்பற்றியுள்ளது. தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் அதிமுக 3 இடங்களில் வென்ற நிலையில், திமுக 12 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 811 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், பெரிய நெகமம் பேரூராட்சியில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்தலுக்கு முன்பே பெரிய நெகமம் பேரூராட்சியை போட்டியின்றி பெரும்பான்மை பலத்துடன் திமுக கைப்பற்றியது. இதனால் மீதமுள்ள 802 பதவிகளுக்கு கடந்த 19 ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 3 ஆயிரத்து 366 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கோவை மாவட்டத்தில் நடந்த தேர்தலில் மொத்தம் 59.61 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. கோவை மாநகராட்சி பகுதியில் 53.61 சதவீதமும், நகராட்சிகளில் 67.09 சதவீதமும், பேரூராட்சிகளில் 73.83 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றது. நகரப்பகுதிகளை விட கிராமப்பகுதிகளில் அதிகளவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை 17 மையங்களில் நடைபெற்றது. கோவை மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒரு இடத்திலும், 7 இடங்களில் நகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையும், 9 இடங்களில் பேரூராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.