போக்குவரத்தை சீர் செய்ய விசில் ஊதிய ராணுவ வீரர்; புகாரளித்த திமுக- பெரம்பூரில் பரபர!
பெரம்பூரில் போக்குவரத்தை சீர் செய்ய விசில் ஊதிய துணை ராணுவப்படை வீரர்.. விசில் தவெகவின் சின்னம் என காவல் துணை ஆணையரிடம் திமுகவினர் புகார்

பெரம்பூரில் போக்குவரத்தை சீர் செய்ய விசில் ஊதிய துணை ராணுவப்படை வீரர்.. விசில் தவெகவின் சின்னம் என காவல் துணை ஆணையரிடம் திமுகவினர் புகார்.
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 23) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2021 தேர்தலில் மொத்தமாக 76 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்த நிலையில், முழு வீச்சில் மக்கள் வந்து வாக்களித்து வருகின்றனர்.
234 தொகுதிகளிலும் தனித்துக் களமிறங்கும் தவெக
இந்த நிலையில் தவெக முதல்முறையாக தமிழ்நாட்டு அரசியலில் களமிறங்கி உள்ளது. அக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துக் களமிறங்கி உள்ளது.
தவெகவின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இவரின் தவெக, விசில் சின்னத்தில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட மகாகவி பாரதிதாசன் நகரில் வாக்குப்பதிவு முழு வீச்சில் நடந்து வருகிறது. இதில் கண்காணிப்புப் பணிகளில் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்தைச் சீர் செய்யும் வகையில் துணை ராணுவப் படையினரில் ஒருவர் கழுத்தில் போட்டிருக்கும் விசிலை எடுத்து ஊதி, வாக்காளர்களை ஒழுங்குபடுத்தினார்.
தவெக சின்னம் விசில்
எனினும் தவெக சின்னம் விசில் என்பதால், அதை பயன்படுத்தக் கூடாது என்று திமுகவினர் காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து விசில் சின்னத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று காவல் துணை ஆணையர் சரவணன், சம்பந்தப்பட்ட ராணுவ வீரரிடம் அறிவுறுத்தினார்.
இதனால், ராணுவ வீரர் விசிலைக் கழுத்தில் இருந்து கழற்றி வைத்துவிட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் மகாகவி பாரதிதாசன் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ட்ரெண்டிங் செய்திகள்




















