Sowmiya Anbumani: நாளை வேட்புமனுத் தாக்கல் செய்கிறார் செளமியா அன்புமணி! அழைப்பு விடுத்த பாமக!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின்கீழ் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி நாளை (25.3.2024) வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின்கீழ் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி நாளை (25.3.2024) வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக தலைமையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன.
பாஜக கூட்டணியில் பாமக
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்கீழ் பாமக உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன. எப்போதும்போல நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
செளமியா அன்புமணி போட்டி
இந்த நிலையில் தர்மபுரி தொகுதியில் பாமக போட்டியிடுகிறது. மாநிலம் முழுவதும் 10 தொகுதிகளில் பாமக போட்டியிடும் நிலையில், தர்மபுரி தொகுதியில் அரசாங்கம் என்னும் வேட்பாளர் போட்டியிடுவதாக இருந்தது. எனினும் பிறகு, பாமக தலைவர் அன்புமணியின் மனைவியும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான செளமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வேட்புமனுத் தாக்கல் 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையே செளமியா அன்புமணி, நாளை காலை 11:00 மணிக்கு தர்மபுரி (தொப்பூர்) அடுத்து உள்ள சுங்கச் சாவடியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக, தர்மபுரி நால்ரோடு வருகை தந்து, அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணிக்குள் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.
வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு தர்மபுரி கோட்டை கோவில் அருகில் டி.என்.வி ராஜ் திருமண அரங்கில் பிற்பகல் 3.00 மணிக்கு வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியிலும், வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும் பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி எம்.பி கலந்துகொள்கிறார். அவருடன் பா.ம.க மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகளும், அணி பொறுப்பாளர்களும், தோழமைக் கட்சியினரும் கலந்துகொள்ள உள்ளதாக பாமக தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாம்: DMK vs AIADMK vs BJP vs NTK: மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் 4 முனைகளில் போட்டியிடும் 160 வேட்பாளர்கள் யார் யார்? இதோ முழு பட்டியல்!