ஆட்சியில் பங்கு கேட்கும் மாணிக்கம் தாகூருக்கு ஸ்கெட்ச்.. காங்கிரஸ் தலைமை எடுக்கும் அதிரடி முடிவு!
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சிலர் வெளிப்படையாக ஆட்சியில் பங்கு கேட்டு வருவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணி கட்சிகளைப் பற்றி பொதுவெளியில் பேசினால் கடும் நடவடிக்கை பாயும் என காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ளது. இந்த முறை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சிலர் ஆட்சியில் பங்கு கேட்டு வருவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் இதனை வெளிப்படையாக பதிவிட்டு வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என திட்டவட்டமாக கூறிய நிலையில் காங்கிரஸில் எழுந்துள்ள கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸூம் திமுகவும் பாரம்பரிய கூட்டணி கட்சி
இந்த நிலையில் அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கே.சி. வேணுகோபால், “காங்கிரஸூம் திமுகவும் பழைய கூட்டணிக் கட்சிகள். பாசிச சக்திகளை எதிர்த்தும், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகப் போராடி வரும் பாரம்பரியம் எங்களுக்கு உண்டு. நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில் கூட்டணி தொடர்பான விவாதத்திற்கு நாங்கள் காத்திருக்கிறோம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டணி குறித்து உயர்மட்டக் குழுவால் இறுதி முடிவு எடுக்கப்படும். அதிகாரப் பகிர்வு கோரிக்கை பற்றி காங்கிரஸ் தலைமை உரிய நேரத்தில் உங்கள் அனைவருக்கும் தெரிவிக்கும்” என கூறினார்.
நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை
தொடர்ந்து ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, “கட்சியை வளர்க்க வேண்டும், கட்சிப்பணியை ஆற்ற வேண்டும், 234 தொகுதிகளிலும் ராகுல்காந்தியும், முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பதாகவும் கருதி வெற்றி பெற வேண்டும். 100 சதவிகிதம் வெற்றி பெற வேண்டும் என மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அகில இந்திய தேசிய செயலாளர் கே.சி.வேணுகோபாலும் இதனை தெளிவுப்படுத்தியிருக்கிறார். யாராவது கூட்டணி பற்றி பேச வேண்டும் என நினைத்தால் அகில இந்திய தலைமை அல்லது மாநில தலைமையிடம் தான் பேச வேண்டும். பொதுவெளியில் பேசக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தும் ஐவர் குழுவில் மாநில தலைவராக நானும் இருக்கிறேன். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை எங்கு பேச வேண்டுமோ அங்கு பேச வேண்டும். மைக் முன்னால் பேசினால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு ஆகியவை கிடைத்து விடுமா என சொல்லுங்கள். இதுதொடர்பாக தலைமையிடம் தான் பேச வேண்டும்.
கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரின் கோரிக்கைகளை அவர்களின் தனிப்பட்ட கருத்து என தெளிவுப்படுத்தியுள்ளார். அனைத்து விஷயங்களையும் அகில இந்திய தலைமை கவனித்துக் கொண்டு இருக்கிறது. அவர்கள் இதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். கட்சிக்கு மேலானவர்கள் யாரும் இல்லை.அப்படி நினைத்திருந்தால் அது பிரம்மை.
அகில இந்திய தலைமை தொடங்கி நான் வரை அனைவரும் எச்சரிக்கை விடுத்துள்ளோம். கூட்டணி விஷயத்தை பேசி தீர்த்துக் கொள்வோம் என தலைமை சொல்லியிருப்பதை நாங்கள் பின்பற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.





















