Congress Candidates: தொடர் இழுபறி; ஒருவழியாக வெளியான முதற்கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் - யார் யார்?
Congress Candidates List Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் யார்யார் போட்டியிடுகின்றனர் என முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
தொடர் இழுபறிக்குப் பிறகு ஒருவழியாக திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்நோக்கிக் காத்திருந்த நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதன்படி ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் பணிகள் சூடுபிடித்துவிட்ட நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன. கூட்டணிக் கட்சிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு, வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி மட்டும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது.
வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி
திமுகவில் கூட்டணியை முதலில் உறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ததும் காங்கிரஸ் கட்சிதான். எனினும் வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி நீடித்து வந்தது.
இந்த நிலையில் தொடர் இழுபறிக்குப் பிறகு ஒருவழியாக திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், திருவள்ளூர், கடலூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மற்றும் நெல்லை தொகுதிகளுக்கு அறிவிக்கப்படவில்லை. புதுச்சேரியில் வைத்திலிங்கம் போட்டியிடுகின்றார்.
வ.எண் | தொகுதி | காங்கிரஸ் வேட்பாளர் |
1 | திருவள்ளூர் | சசிகாந்த் செந்தில் |
2 | கடலூர் | விஷ்ணு பிரசாந்த் |
3 | மயிலாடுதுறை | இன்னும் அறிவிக்கப்படவில்லை |
4. | சிவகங்கை | கார்த்தி சிதம்பரம் |
5. | நெல்லை | இன்னும் அறிவிக்கப்படவில்லை |
6. | கிருஷ்ணகிரி | கோபிநாத் |
7. | கரூர் | ஜோதிமணி |
8 | விருதுநகர் | மாணிக்கம் தாக்கூர் |
9 | கன்னியாகுமரி | விஜய் வசந்த் |
10 | புதுச்சேரி | வைத்திலிங்கம் |
திமுக கூட்டணியில் யார் யார்?
தமிழகக் கட்சிகளிலேயே முதல் முறையாக திமுகதான் கூட்டணியை இறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டையும் முடித்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் உள்ளன.
அதிமுக கூட்டணியில் யார் யார்?
இதற்கிடையே அதிமுக கூட்டணியில் பாமக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவில் இணைந்தது. எனினும் தேமுதிக அதிமுக கூட்டணியில் உள்ளது. தேமுதிகவுடன் புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளும் அதிமுக கூட்டணியில் உள்ளன.
பாஜக கூட்டணி
இதற்கிடையில் தமாகா, பாமக, அமமுக, அதிமுக தொண்டர் உரிமை மீட்பு அணி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகிய கூட்டணிக் கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கன்வே இணைந்துள்ளன. சரத்குமார் தனது கட்சியையே (சமத்துவ மக்கள் கழகம்) பாஜகவில் இணைத்துள்ளார்.