Coimbatore Election Results 2022 | கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யார்? முழு விபரம் இதோ..!
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் முதல் திமுக மேயர் என்ற பெருமையை பெற திமுகவில் கடும் போட்டி நிலவி வருகிறது
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணி முன்னிலையில் இருந்து வந்தது. 7 நகராட்சிகளையும், 31 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. இதேபோல கோவை மாநகராட்சியையும் திமுக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை இறுதியில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளது. திமுக 73 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 5 வார்டுகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 வார்டுகளில் வென்றுள்ளது. போட்டியிட்ட 3 இடங்களிலும் மதிமுகவும், போட்டியிட்ட 2 இடங்களிலும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மனிதநேய மக்கள் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சியினர் உடன் சேர்த்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 76 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக 3 இடங்களிலும், சுயேச்சையாக போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.
கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் இரண்டு முறை கூட்டணி கட்சிகளுக்கு திமுக மேயர் பதவியை வழங்கிய நிலையில், திமுக முதல் முறையாக நேரடியாக மேயர் பதவியை கைப்பற்ற உள்ளது. மேலும் கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் முதல் திமுக மேயர் என்ற பெருமையை பெற திமுகவில் கடும் போட்டி நிலவி வருகிறது. அதில் மாநகராட்சி கவுன்சிலராக தேர்வு பெற்றுள்ள 22 வயது மாணவி நிவேதா சேனாதிபதி, முன்னாள் கவுன்சிலர்கள் இலக்குமி இளஞ்செல்வி, மீனா லோகு உள்ளிட்டோருக்கு மேயர் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
52 வது வார்டில் வெற்றி பெற்ற இலக்குமி இளஞ்செல்வி, சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்கின் மனைவி. ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று கவுன்சிலராக பதவி வகித்துள்ளார். நா.கார்த்திக் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பதால் மனைவிக்கு மேயர் பதவியை பெற்று அதிகாரத்தை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறார். அதேசமயம் திமுக வாக்கு வங்கிக்காக கோவை மாவட்டத்தில் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தினருக்கு மேயர் பதவியை ஒதுக்க நினைத்தால், நாய்க்கர் சமூகத்தை சேர்ந்த இலக்குமி இளஞ்செல்விக்கு வாய்ப்பு மறுக்கப்படும்.
97 வது வார்டில் 7786 வாக்குகள் வித்தியாசத்தில் 22 வயது மாணவி நிவேதா சேனாதிபதி வெற்றி பெற்றுள்ளார். பஞ்சாப்பில் எம்.ஏ. சைக்கலாஜி இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவர், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதியின் மகளாவார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சேனாதிபதிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், மகளுக்கு மேயர் பதவியை பெற்று தர கடுமையாக முயன்று வருகிறார். தேர்தல் பரப்புரையின் போது அமைச்சர் செந்தில்பாலாஜி நிவேதா மேயர் வேட்பாளராக வாய்ப்பு இருப்பதாக சூசகமாக தெரிவித்தார். கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது இவருக்கு பலம். அதேசமயம் முதல் முறையாக வென்ற நிவேதாவிற்கு அனுபவமின்மை ஒரு பலவீனம்.
கோவை மாநகராட்சியில் ஏற்கனவே கவுன்சிலராக பதவி வகித்த மீனா லோகுவும் வெற்றி பெற்றுள்ளார். இவரும் மேயர் பதவியை பெற விருப்பம் காட்டி வருவதாக தெரிகிறது. அதேசமயம் திமுக பொறுப்பாளர்களின் ஆதரவு இல்லாத இவருக்கு, மேயர் பதவி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.
திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களது குடும்பப் பெண்கள் மூலம் மேயர் பதவியை கைப்பற்றி அதிகாரத்தை தன்வசப்படுத்தும் முனைப்பில் உள்ளனர். ஆனால் கோவை திமுக பொறுப்பாளர்களின் செயல்பாடுகள் மீது திமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் புதியவர்களை நியமிக்க திமுக தலைமை விரும்பினால் இவர்களுக்கு பதிலாக புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். அதேசமயம் கோவையில் திமுகவிற்கு அபார வெற்றியை அமைச்சர் செந்தில் பாலாஜி பெற்று தந்திருப்பதால், அவரது ஆசி பெற்றவரே கோவையின் முதல் திமுக மேயராக வாய்ப்புள்ளது.