‛விடியும் முதல் அடையும் வரை பொய்தான்...’ திமுகவை சாடிய பாஜக தலைவர் அண்ணாமலை!
‛‛பாஜக ஆட்சியில் இருக்கும் வரை... பட்டாசு தொழிலை யாரும் தொட்டு பார்க்க முடியாது’’ -அண்ணாமலை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம், திருத்தங்கலில் நடைபெற்றது. பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். குறிப்பிட்ட நேரத்தை விட 3 மணி நேரம் தாமதமாக வந்த அண்ணாமலை, வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
பட்டாசு தொழிலுக்கு மத்திய அரசு உதவி வருகிறது. மத்திய அரசு பட்டாசு தொழிலுக்கு நிறைய உதவி செய்துள்ளது. சீனப் பட்டாசு வரவுகளை தடுத்துள்ளது. பட்டாசினால் எந்த புகை மாசும் ஏற்படவில்லை. பட்டாசு குறித்த நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கின்றோம். நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடர்ந்து பட்டாசால் மாசுஏற்படுவதாக தெரிவித்து வருகிறார். பாரத பிரதமர் 8 ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை பார்த்து பார்த்து செய்கிறார். பெண்களுக்கு பல சலுகைகளை வழங்கி உள்ளார்.
நான் உட்பட நாம் அனைவரும் கொரானோ பயம் இல்லாமல் நாம் அமர்ந்திருப்பது, மோடியின் தடுப்பூசி நடவடிக்கையால் சாத்தியமாகியுள்ளது. 8 மாத காலம் விடியாத ஆட்சி நடைபெறுகிறது. விடியாத சூழ்நிலையே காணப்படுகிறது. அனைத்திலும் ஊழல் நடைபெறுகிறது. பிறப்பு, இறப்பு, எந்த சான்றிதழ் பெற்றாலும் அனைத்திலும் பணம் விளையாடுகிறது.
நீட் தேர்வால் கூலி தொழிலாளி மகன், சாதாராண குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சீட்டு கிடைத்துள்ளது. நீட் வருவதால் ஏழை மக்கள் மருத்துவராக முடியும். திமுக தரப்பு எதிர்ப்பதற்கு காரணம் அவர்கள் கோடி கோடியாய் கட்டியுள்ள மருத்துவ கல்லூரிகளில் வசூல் செய்ய முடியாது என்பதனால் தான். பட்டாசு என்பது நமது கலாச்சாரம். பிஜேபி மட்டுமே அதை ஆதரிக்கிறது, பாதுகாக்கிறது. பட்டாசுக்காக பல முயற்சிகளையும், நீதிமன்றம் வரை சென்று போராடி இருக்கிறது பாஜக.
பட்டாசு தொழிலை பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருக்கும் வரை யாரும் தொட்டு பார்க்க முடியாது. விடிந்தது முதல் அடையும் வரை திமுகவினர் பொய் சொல்லி வருகின்றனர். நீண்ட நேரமாக காத்திருக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள்,’’ என்று அண்ணாமலை பேசினார்.
முன்னதாக அண்ணாமலை வர தாமதமானதால் காத்திருந்த மக்கள், தடையில் படுத்து உறங்க ஆரம்பித்தனர். சிலர் மொபைல் போன்களை நொண்ட ஆரம்பித்தனர். சிலர், வெளியே சென்று பூங்காவில் விளையாட தொடங்கினர். இதனால் கூட்டம் ஆங்காங்கே பிரிந்து நின்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் அண்ணாமலை வந்ததும், அவர்கள் அனைவரையும் உள்ளே ஒருங்கிணைக்க கட்சியினர் சிரமப்பட்டனர். அதனால் தான் தன் உரையின் இறுதியில், அங்கிருந்தவர்களிடம் அண்ணாமலை மன்னிப்பு கோரினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்