Lok Sabha Election 2024: தேமுதிகவுக்கு 5 இடங்கள்.. கூட்டணியை நம்பி அதிமுக இல்லை.. இபிஎஸ் திட்டவட்டம்!
அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் 16 தொகுதிகளில் போட்டியிடுபவர்கள் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அஇஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் திமுக மட்டுமே கூட்டணி கட்சிகளுடன் 40 தொகுதிகளுக்கான பங்கீட்டை இறுதி செய்துள்ளது. அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றது. ஆனால் இம்முறை இந்த கூட்டணி பிரிந்துள்ளது. இதில் பாஜக தலைமையிலாக கூட்டணியில் பாமக, தமாக, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. அதிமுக தங்கள் கூட்டணியில் எப்படியாவது தேமுதிகவை இணைக்க வேண்டும் என்ற முனைப்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.
முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்த பிறகு அந்த கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் என்ன மாதிரியான முடிவு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே இன்றைய தினம் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் 16 தொகுதிகளில் போட்டியிடுபவர்கள் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 இடங்களும், எஸ்டிபிஐ மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிக்கு தலா 1 தொகுதிகளும் ஒதுக்கப்படும்” என தெரிவித்தார்.
மேலும் பாஜக கூட்டணிக்கு பாமக சென்றது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “பாஜக கூட்டணிக்கு பாமக சென்றதில் எங்களுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. அதிமுக சொந்த காலில் நிற்கின்ற கட்சி. கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம், வராவிட்டால் மகிழ்ச்சி. யாரையும் வரவேற்க முடியாது. கூட்டணியை நம்பி அதிமுக இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.