’இந்த தேர்தலில் தோற்றிருக்கலாம், நான் இன்னும் தோற்கவில்லை’ - அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்
“இந்த தேர்தலில் தோற்றிருக்கலாம். நான் இன்னும் தோற்கவில்லை. எனது மக்கள் பணி தொடரும்” என்று கோவையில் தோற்ற அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
கோவை மக்களவை தொகுதி 1952 ம் ஆண்டு முதல் இதுவரை 17 தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், திமுக மற்றும் பாஜக தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இதில் ஆண் வாக்காளர்கள் 10,41,349 பேர், பெண் வாக்காளர்கள் 10,64,394 பேர், மூன்றாம் பாலினத்தவர் 381 பேர் என மொத்தம் 21,06,124 வாக்காளர்கள் உள்ளனர். 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டனர். அதில் திமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார், அதிமுகவை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவு விபரம்
கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் 582 மையங்களில் 2059 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. கோவை மக்களவை தொகுதியில் மொத்தம் 64.42 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. கோவை வடக்கு தொகுதியில் 58.74 சதவீத வாக்குகளும், கோவை தெற்கு தொகுதியில் 59.25 சதவீத வாக்குகளும், சிங்காநல்லூர் தொகுதியில் 59.33 சதவீத வாக்குகளும், கவுண்டம்பாளையம் தொகுதியில் 66.42 சதவீத வாக்குகளும், பல்லடம் தொகுதியில் 67.42 சதவீத வாக்குகளும், சூலூர் தொகுதியில் 75.33 சதவீத வாக்குகளும் பதிவாகின. மொத்தம், 13 லட்சத்து, 66 ஆயிரத்து, 5978 வாக்காளர்கள் வாக்களித்தனர். இதேபோல 7,239 தபால் ஓட்டுகள் பெறப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன.
மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 94 வாக்கு எண்ணிக்கை மேசைகளும், 7 தபால் வாக்கு எண்ணிக்கை மேசைகளும் போடப்பட்ட்டுள்ளன. மொத்தம் 194 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றன. பல்லடம், சூலுார் மற்றும் சிங்காநல்லுார் ஆகிய மூன்று தொகுதிகளில் தலா 24 சுற்றுகள், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு தொகுதியில் தலா 22 சுற்றுகள் மற்றும் கோவை தெற்கு தொகுதி தொகுதியில் 18 சுற்றுகளில் ஓட்டுகள் எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் துவங்கிய நிலையில், 8:30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்றன.
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
">
Heartfelt thanks to everyone 🙏 pic.twitter.com/xvrCIuiAdf
வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். பாஜக மாநிலத் தலைவர் தொடர்ந்து பின்னடைவு சந்தித்து வந்தார். சில சுற்றுகளில் திமுகவை விட கூடுதலாக வாக்குகளை பெற்றாலும், அவரால் இறுதிவரை முன்னிலை பெற முடியவில்லை. இறுதியாக 24 சுற்றுகள் மற்றும் தபால் வாக்குகள் சேர்த்து கோவை மக்களவை தொகுதியில் 1 இலட்சத்து 18 ஆயிரத்து 68 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார். திமுக 568200 வாக்குகளும், பாஜக 450132 வாக்குகளும், அதிமுக 236490 வாக்குகளும், நாதக 82657 வாக்குகளும் பெற்றனர்.
இதனால் 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கோவை தொகுதியில் நேரடியாக போட்டியிட்டு வென்றுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வென்ற, அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தனக்காக வாக்களித்த மக்களுக்கும், பணியாற்றிய கட்சியினருக்கும் நன்றி தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “இந்த தேர்தலில் தோற்றிருக்கலாம். நான் இன்னும் தோற்கவில்லை. எனது மக்கள் பணி தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.