கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்போவது யார்? அடித்து தூக்கிய காங்கிரஸ்...மண்ணை கவ்வுகிறதா பாஜக..? கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
கடந்த தேர்தலில் போலவே, இந்த தேர்தலிலும் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என அரசியல் வல்லுநர்கள் கருதிய நிலையில், அதற்கு நேர்மாறான தகவல்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளில் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் உள்ள மாநிலம் என்றால் அது கர்நாடகாதான். இங்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற்று, 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.
பாஜக vs காங்கிரஸ் vs மதச்சார்பற்ற ஜனதா தளம்
ஒரு மாநிலத்தில் பொதுத் தேர்தல் வருகிறது என்றால், பாஜக தான் வேட்பாளர்களை முதலில் அறிவித்து தேர்தல் களத்தினை எதிர்கொள்ளும். ஆனால் இம்முறை காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் யார் என்பதை அறிவித்து விட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இது காங்கிரஸ் கட்சியின் அரசியல் யுக்தியாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மூன்று மாநிங்களில் ஆட்சி செய்யும் காங்கிரஸ், கர்நாடகாவை கைப்பற்ற இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி தனது கூட்டணியில் இணையும் மற்ற கட்சிகளுக்கு மீதமுள்ள 100 இடங்களில் சிலவற்றை வழங்கலாம் என கூறப்படுகிறது.
இது மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் விரித்துள்ள வலையாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், அக்கட்சியின் தலைவர் குமாரசாமி காங்கிரஸ் கட்சிக்கு பிடி கொடுக்காமல், மம்தாவை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
பாஜக யுக்தி
இம்முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக செயல்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை பிரதமர் மோடி 7 முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் மக்களை திரட்டி மற்ற கட்சிகளுக்கு இன்னும் மோடி அலை இருக்கிறது என்பதை உணர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மும்முனை போட்டியில் முந்திய காங்கிரஸ்:
இச்சூழலில், ABP News - CVoter team இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது. கடந்த தேர்தலில் போலவே, இந்த தேர்தலிலும் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என அரசியல் வல்லுநர்கள் கருதிய நிலையில், அதற்கு நேர்மாறான தகவல்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளில் வெளியாகியுள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, காங்கிரஸ், 224 தொகுதிகளில் 121 தொகுதிகளில் வென்றி ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, 74 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. மூன்றாவது முக்கிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம், 29 தொகுதிகளில் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த முதலமைச்சர் யார்?
கர்நாடகாவின் முதலமைச்சராக நீங்கள் யாருக்கு வாய்ப்பளிப்பீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு 39.1 சதவிகிதத்தினர் காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா என பதில் அளித்துள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக, 31.1 சதவிகிதத்தினர் பாஜகவின் பசவராஜ் பொம்மையே முதலமைச்சராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சரான எச். டி. குமாரசாமிக்கு ஆதரவாக 21.4 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் தகவல்களை நேரலையில் காண:
பொறுப்பு துறப்பு: இந்த கருத்துக்கணிப்பு, சி வோட்டர் நிறுவனத்தால் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. கர்நாடக முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 24,759 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. இதில், ±3 to ±5% வரை மாற்றம் இருக்க வாய்ப்பு.