சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
தேர்தல் நடத்தை விதியை மீறியதாக நடிகர் விஜய் எதிராக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகாரால் பரபரப்பு நிலவுகிறது.
சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலரான ஆர்.டி.ஐ செல்வம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஜய் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக நேற்று நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள ஒரு வாக்கு சாவடியில் வாக்களிக்க செல்லும்போது 200க்கும் மேற்பட்ட நபர்களுடன் அத்துமீறி வாக்கு சாவடிக்குள் சென்றதாகவும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் தேர்தல் விதிமுறைகளை மீறி சென்றதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் வரை பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடிவரக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் நடிகர் விஜய் தனது சுய நல விளம்பரத்திற்காக நீலாங்கரை மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையிலும் இளைஞர்கள் மத்தியில் தவறான முன்னுதாரணத்தை அமைக்கும் வகையிலும் செயல்பட்டுள்ளதாகவும் அவர் புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் நடிகர் விஜய் வாக்குச்சாவடியில் காத்திருந்த வாக்காளர்களை அவமதிக்கும் வகையில், வரிசையில் நிற்காமல் காவல்துறையினரின் உதவியோடு தனது வாக்கை செலுத்தியதாகவும் கட்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே இவ்வாறு செய்வது நல்லது கிடையாது எனவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் உடனடியாக நடிகர் விஜய் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மேரி செயல்பட்டதாக இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் ஆர்டி.ஐ குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று நாடாளுமன்றத்தேர்தலின் முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர்.
அந்த வகையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் நேற்று தனது வாக்கினை செலுத்த நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வருகை தந்தார். அப்போது அவரை காண்பதற்கு ரசிகர்கள் பல்வேறு தரப்பினரும் வாக்குச்சாவடி முன்பு குவிந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி நடிகர் விஜய் தனது வாக்கினை பதிவு செய்து விட்டு வீடு திரும்பினார்.
இதற்காக விஜய் வீட்டிலிருந்து கிளம்பும்போது ரசிகர்களுக்கு தகவல் சென்றுவிட்டதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.