உலக புத்தக தினத்தில் மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ள புத்தகங்களை வழங்கிய பழக்கடைக்காரர்
உலக புத்தக தினத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பொது அறிவு புத்தகங்களை வழங்கிய பழக்கடைக்காரர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பழக்கடை நடத்திவருபவர் உலக புத்தக தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பொது அறிவு புத்தகங்களை வழங்கினார். இவர் தனது வாடிக்கையாளர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளாக தினமும் பயனுள்ள புத்தகங்களை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக புத்தக தின கொண்டாட்டம்
உலக புத்தக தினம், இது சர்வதேச புத்தக தினம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆண்டுதோறும் ஏப்ரல் 23 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1995 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) ஏப்ரல் 23 ஆம் தேதியை இந்த நாளைக் கொண்டாட அதிகாரப்பூர்வமாக நியமித்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் புத்தகங்களைக் கொண்டாடவும், படிக்கவும் மக்கள் ஒன்று கூடுவார்கள்.
வாடிக்கையாளர்களுக்கு புத்தகம் வழங்கும் பழக்கடைக்காரர்
தஞ்சாவூர் பூச்சந்தை பகுதியில் பழக்கடை வைத்துள்ளவர் ஹாஜாமொய்தீன் (64). ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழங்கள், நெல்லிக்காய் உள்ளிட்ட அனைத்து வகை பழங்களையும் வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடையை மக்கள் தோழர் பழக்கடை என்றும் புத்தக பழக்கடை என்றும் சொல்வார்கள். இதற்கு காரணம் உள்ளது. தன்னிடம் பழங்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் பயனுள்ள புத்தகங்களையும், குங்குமசிமிழ், ஊதுபத்தி ஸ்டாண்ட், குடிநீர் பாட்டில் ஆகியவற்றை தினமும் வழங்கி வருவது இவரது வாடிக்கை. இதை கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறார்.
மாணவ, மாணவிகளுக்கு பொது அறிவு புத்தகங்கள்
இந்நிலையில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு பூச்சந்தையில் உள்ள கணேச வித்யாலயா உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் பயிலும் 120 மாணவ, மாணவிகளுக்கு பொது அறிவு புத்தகங்களை ஹாஜாமொதீன் வழங்கினார். பள்ளி தலைமையாசிரியை அல்லிராணி, ஆசிரியர்கள் புகழேந்தி, ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பழங்களுடன் குங்குமச்சிமிழ், ஊதுபத்தி ஸ்டாண்ட்
தான் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கியது குறித்து பழக்கடைகாரர் ஹாஜாமொய்தீ்ன் கூறுகையில், நான் கடந்த 12 ஆண்டுகளாக தினமும் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள புத்தகங்களை வழங்கி வருகிறேன். இதில் தேசத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, சித்த மருத்துவம், சமையல் குறிப்புகள், பொது அறிவு புத்தங்கள், பிற மொழிகளை கற்றுக் கொள்வது என பல்வேறு ஏராளமான தலைப்புகளில் புத்தகங்களை வழங்கி வருகிறேன். பழங்களோடு குங்குமச்சிமிழ், ஊதுபத்தி ஸ்டாண்ட் போன்ற பொருட்களையும் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளேன். உலக புத்தக தினத்தை முன்னிட்டு அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் 120 பேருக்கு இலவசமாக புத்தகங்களை அவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழங்கினேன்.
புத்தக வாசிப்பை மேற்கொள்ள வேண்டும்
தொலைக்காட்சி, செல்போன் வரவால் புத்தக வாசிப்பு என்பது குறைந்து விட்டது. இதை கொஞ்சமாவது மாற்றி வருங்கால தலைமுறையினர் புத்தக வாசிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் புத்தகங்களை வாடிக்கையாளர்களுக்கு தினமும் வழங்கி வருகிறேன். புத்தகங்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் நிச்சயம் அதை தாங்களும் படித்து வீட்டில் உள்ள இளைய தலைமுறையினரையும் படிக்க ஊக்குவிப்பார்கள் என்பதால் இதை செய்து வருகிறேன். புத்தகங்களை படிக்கும் ஆர்வத்தை முடிந்தளவுக்கு என்னால் ஏற்படுத்தி வருகிறேன் என்றார்.