Anna University: 'அண்ணா பல்கலை., தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு’ .. துணைவேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு..!
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விகளுக்கான பல்கலைக்கழகமாக செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைகழகம் தேர்வு கட்டணம் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லுரிகளில் தேர்வுக் கட்டணம், சான்றிதழ் கட்டணம் ஆகியவை 50% உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதல் வழங்கிய நிலையில் இந்த கட்டண உயர்வு மாணவ, மாணவிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கட்டண உயர்வு விபரம்
இளங்கலை எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு தாளுக்கும் ரூ.150 ஆக இருந்த தேர்வுக் கட்டணம் ரூ.225 ஆக உயர்த்தப்பட்டது. இளங்கலை செய்முறை தேர்வுக்கட்டணம் ரூ.300ல் இருந்து ரூ.450 ஆக உயர்த்தப்பட்டது. மேலும் முதுகலை செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வு உள்ளிட்டவற்றுக்கான கட்டணம் 450 ரூபாயில் இருந்து 650 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை ஆய்வு கட்டுரை சமர்பிக்க தேர்வு கட்டணம் ரூ.600ல் இருந்து ரூ.900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டிகிரி சான்றிதழ் பெற கட்டணம் ரூ.1000ல் இருந்து ரூ.1,500 ஆக அதிகரிக்கப்பட்டது.
எழுந்த எதிர்ப்பு - அமைச்சர் பொன்முடி பதில்
அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் உயர்வு விவகாரம் கடும் எதிர்ப்புகளை பெற்றது. மாணவ,மாணவிகள் மட்டுமல்லாது அரசியல் கட்சி தலைவர்களும் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரிக்கை விடுத்தனர். இப்படியான நிலையில் இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, “பொதுவாக பல்கலைக்கழகங்களில் எல்லா பாடங்களுக்கும் ஒரே மாதிரியான தேர்வுக் கட்டணம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டது’ என விளக்கம் கொடுத்தார்.
மேலும், ‘இந்த ஆண்டுக்கு தேர்வுக் கட்டணம் கட்டாயம் உயர்த்தப்படாது. வரும் காலத்தில் ஒரே கட்டணத்தை வசூலிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்” என தெரிவித்தார்.
தற்காலிகமாக நிறுத்திவைப்பு
இதனிடையே இன்று (நவம்பர் 18) செய்தியாளர்களை சந்தித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், “உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவின் பேரில் தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. அடுத்த செமஸ்டரில் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அமல்படுத்த அமைச்சர் அறிவுறுத்தினார்’ என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘நடப்பாண்டு மாணவர்கள் பழைய தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என்றும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம் மாணவர்களிடம் திருப்பி அளிக்கப்படும். அமைச்சர் உத்தரவு தொடர்பாக சிண்டிகேட் உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்படும். பொதுவாக கட்டணத்தை 100% உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் 9 ஆண்டுகளுக்குப் பின் 50% மட்டுமே உயர்த்தியுள்ளோம்’ எனவும் வேல்ராஜ் தெரிவித்தார். தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவம் மாணவ, மாணவிகளிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.