Veer Gatha 3.0: வீர கதை 3.0 போட்டிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு- வென்றால் ரொக்கப் பரிசுடன் டெல்லி செல்லும் வாய்ப்பு!
வீர தீர விருதுகள் பெற்ற வீரர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
வீர தீர விருதுகள் பெற்ற வீரர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
மத்திய அரசிடம் வீர தீர விருதுகள் பெற்ற வீரர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்களின் தீரத்தையும் உலகறியச் செய்ய வீர கதை என்னும் திட்டத்தை மத்திய அரசு 2021-ல் தொடங்கியது. மாணவர்கள் மத்தியில் வீரர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தத் திட்டம் உதவுகிறது.
பின்னணி என்ன?
பாதுகாப்பு அமைச்சகம், பள்ளி மாணவர்கள் மத்தியில் தீர விருதுகள் பெற்ற விருதாளர்கள் குறித்த விழிப்புணர்வை செயல்திட்டங்கள் வழியாக ஏற்படுத்தும் யோசனையை முன்வைத்தது. அதைத் தொடர்ந்து மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம், மத்தியக் கல்வி அமைச்சகம் மற்றும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை இணைந்து, வீர கதை 1.0 திட்டத்தை ஆரம்பித்தது. தொடர்ந்து வீர கதை 2.0 நடைபெற்ற நிலையில், தற்போது வீர கதை 3.0 போட்டிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பள்ளி மாணவர்களும் இதில் கலந்துகொள்ளலாம். இதில் இருந்து 100 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். குறிப்பாக 3 முதல் 5ஆம் வகுப்பு வரை 25 மாணவர்களும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை 25 மாணவர்களும் 9 முதல் 10ஆம் வகுப்பு வரை 25 மாணவர்களும் 11, 12ஆம் வகுப்பில் இருந்து 25 மாணவர்களும் என 100 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கு ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 4 சிறந்த படைப்புகளை சிபிஎஸ்இ தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் இருந்து மொத்தமாக 25 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும். அவர்களுக்குத் தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு அளிக்கப்படும். அவர்கள் சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு டெல்லி அழைத்துச் செல்லப்படுவர். சிபிஎஸ்இ தளத்தில் பதிவு செய்யப்பட்ட படைப்புகள் அனைத்துக்கும் மின்னணு சான்றிதழ் வழங்கப்படும்.
வீர கதை 1.0 ஆகஸ்ட் 2021 முதல் ஜனவரி 2022 வரை நடைபெற்றது. 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி வீர கதை 1.0 திட்டத்தின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தொடர்ந்து வீர கதை 2.0 போட்டிகள் நடைபெற்று, வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் வீர கதை 3.0 போட்டிகளில் கலந்துகொள்ளலாம் என்று பள்ளி மாணவர்களுக்கு சிபிஎஸ்இ அழைப்பு விடுத்துள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்கள் சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு டெல்லி செல்லவும், தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு பெறவும் முடியும். இதில் மாணவர்கள் கட்டுரை, கவிதை, ஓவியம், வரைபடம் ஆகிய படைப்புகளை மேற்கொள்ளலாம்.
போட்டிகளில் கலந்துகொள்வது எப்படி?
6 முதல் 10ஆம் வகுப்பு வரை ஒரே தலைப்புதான் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், கதை, கவிதை, கட்டுரைகளை 300 வார்த்தைகளில் எழுத வேண்டும். அதேபோல ஓவியம், வரைபடம், வீடியோ வடிவிலும் தங்களின் படைப்புகளை அனுப்பலாம்.
9ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், கதை, கவிதை, கட்டுரைகளை 750 வார்த்தைகளில் எழுத வேண்டும். அதேபோல ஓவியம், வரைபடம், வீடியோ வடிவிலும் தங்களின் படைப்புகளை அனுப்பலாம். 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தங்களின் படைப்புகளை உருவாக்க 1000 வார்த்தைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பங்கேற்பது எப்படி?
மாணவர்கள் முதலில் https://auth.mygov.in/user/register?destination=oauth2/authorize&r=c4ff7840c69c5110a0ed62d28b40c625 என்ற இணையதளத்துக்குச் சென்று, கணக்கைத் தொடங்க வேண்டும்.
தொடர்ந்து https://innovateindia.mygov.in/veer-gatha-3/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
அதில், SUBMIT YOUR ENTRY என்ற தெரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
இதில், மாணவர்கள் தங்களின் படைப்புகளைச் சமர்ப்பிக்கலாம்.
முக்கியத் தேதிகள்
பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சிறந்த படைப்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அக்டோபர் 17 வரை மாவட்ட அளவில், மதிப்பீடு நடத்தப்படும். அக்டோபர் 19 முதல் நவம்பர் 10 வரை மாநில அளவில் மதிப்பீடு நடத்தப்படும். பிறகு, நவம்பர் 14 முதல் டிசம்பர் 10 வரை தேசிய அளவில் மதிப்பீடு நடத்தப்பட்டு, டிசம்பர் 15 அன்று போட்டி முடிவுகள் சமர்ப்பிக்கப்படும்.
முழு விவரங்களுக்கு: https://innovateindia.mygov.in/veer-gatha-3/