AISHE report: வெளியான உயர்கல்வி ஆய்வறிக்கை: இந்தியாவிலேயே உ.பி.யில்தான் அதிகக் கல்லூரிகள்- தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?
AISHE report 2021 22: மத்தியக் கல்வித் துறை சார்பில் 2021- 22ஆம் ஆண்டுக்கான உயர் கல்வி அகில இந்திய ஆய்வறிக்கை (All India Survey on Higher Education - AISHE) வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக அளவிலான கல்லூரிகள் அமைந்துள்ளன. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
மத்தியக் கல்வித் துறை சார்பில் 2021- 22ஆம் ஆண்டுக்கான உயர் கல்வி அகில இந்திய ஆய்வறிக்கை (All India Survey on Higher Education - AISHE) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்காக 42,825 கல்லூரிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 60 சதவீதம் பொதுவானவை. 8.7 சதவீதக் கல்லூரிகள் கல்வி, ஆசிரியர் கல்வி சார்ந்தவை. 6.1 சதவீதக் கல்லூரிகள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தவை. 4.3 சதவீதம் நர்சிங் கல்லூரிகளாகவும் 3.5 சதவீதம் மருத்துவக் கல்லூரிகளாகவும் இருக்கின்றன.
இந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளதாவது:
’’உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 8,375 கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு 8,114 கல்லூரிகளாக இருந்தது. இங்கு ஒவ்வொரு லட்சம் மாணவ - மாணவிகளுக்கும் தலா 30 கல்லூரிகள் அமைந்துள்ளன.
ஒவ்வொரு லட்சம் மாணவ - மாணவிகளுக்கும் 66 கல்லூரிகள்
தொடர்ந்து இரண்டாவதாக மகாராஷ்டிராவில் 4,692 கல்லூரிகள் உள்ளன. அதேபோல கர்நாடகாவில், 4,430 கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஒவ்வொரு லட்சம் மாணவ - மாணவிகளுக்கும் 66 கல்லூரிகள் அமைந்துள்ளன.
ராஜஸ்தானில், 3,934 கல்லூரிகள் அமைந்துள்ளன. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. இங்கு, உயர் கல்வியைக் கற்பிக்க 2,829 கல்லூரிகள் உள்ளன. மத்தியப் பிரதேசத்தில், 2,702 கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் 3 இடங்களுக்குப் பிறகான பட்டியலில் ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், குஜராத், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களும் இணைந்துள்ளன. இந்த மாநிலங்கள் ஒவ்வொன்றும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு குறைந்தது 30 அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளைக் கொண்டுள்ளன.
அசத்தும் கர்நாடகா
கர்நாடக மாநிலத்தில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு 66 கல்லூரிகள் அமைந்துள்ளன. அதைத் தொடர்ந்து தெலுங்கானா (52), ஆந்திரப் பிரதேசம் (49), இமாச்சலப் பிரதேசம் (47), புதுச்சேரி (53), கேரளா (46) என்ற வீதத்தில் உயர் கல்விக்கான கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மாவட்டங்களைப் பொறுத்தவரை, பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிக அளவிலான கல்லூரிகள் இருக்கின்றன. இங்கு மட்டும் 1, 106 கல்லூரிகள் அமைந்துள்ளன. தொடர்ந்து ஜெய்ப்பூர் (703), ஹைதராபாத் (491), புனே (475), பிரயாக்ராஜ் (398), ரங்காரெட்டி (349), போபால் (344), காஜிபூர் (333), சிகார் (330) மற்றும் நாக்பூர் (326) என்ற அளவில் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மாணவர் சேர்க்கை எப்படி?
2020- 21-ல் 4.14 கோடியாக இருந்த உயர் கல்வி மாணவர்கள் சேர்க்கை, 2021- 22ஆம் ஆண்டில், 4.33 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2014- 15ஆம் கல்வி ஆண்டில், 3.42 கோடியாக இருந்தது. அதேபோல கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2014- 15ஆம் ஆண்டில், 1.57 கோடியாக இருந்த மாணவிகளின் எண்ணிக்கை, 2021- 22ஆம் கல்வி ஆண்டில், 2.07 கோடியாக அதிகரித்துள்ளது.
2014- 15ஆம் கல்வி ஆண்டில் இருந்து, புதிதாக 341 பல்கலைக்கழகங்கள்/ கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல, பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் 2021- 22ஆம் ஆண்டில், 6.94 லட்சம் பேராக அதிகரித்துள்ளது’’.
இவ்வாறு உயர் கல்வி அகில இந்திய ஆய்வறிக்கை (All India Survey on Higher Education - AISHE) தெரிவித்துள்ளது.
2021- 22ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை முழுமையாகவும் விரிவாகவும் காண: https://aishe.gov.in/aishe/viewDocument.action;jsessionid=6253EBC7F0BF32541F8AD001956F1094?documentId=353 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.