(Source: ECI/ABP News/ABP Majha)
CBSE Board Exams 2021: எட்டப்படாத பிளஸ் 2 தேர்வு முடிவு; ஏமாற்றத்தில் மாணவர்கள்
சிபிஎஸ்இ மற்றும் மாநில பள்ளி வாரியங்களால் நடத்தப்படும் பள்ளி தேர்வுகள் குறித்து, நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என்று மாணவர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், எந்த முடிவும் எட்டப்படாதது மாணவர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் மாநில கல்வி செயலாளர்கள் இடையே நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதையோ அல்லது ரத்து செய்வது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் மாநில கல்விச் செயலாளர்களுடன் காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, பள்ளி மட்டத்தில் கல்வியில் கொரோனாவின் தாக்கம் குறித்தும், நேரடி வகுப்புகள் இல்லாத சூழ்நிலையை எவ்வாறு பள்ளிகள் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பது குறித்தும் விவாதித்தார்.
12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து தொடர்பாக எந்த விவாதமும் எடுக்கப்படவில்லை என்று இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் பள்ளிகளில் சிறந்த ஆன்லைன் உள்கட்டமைப்பு ஆகியவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. அங்கு பல்வேறு மாநிலங்களின் முதன்மை செயலாளர்கள் உட்பட சுமார் 50 கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்” என்றார்.
மேலும் அந்த அதிகாரி கூறுகையில், “தொற்றுநோய்களின் போது பள்ளி கல்வியை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் தற்போதைய கட்டத்தில் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சிகளை பிரதான கல்விக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார். தேர்வுகள் ரத்து தொடர்பாக எந்த விவாதமும் எடுக்கப்படவில்லை” என்று கூறினார்.
சிபிஎஸ்இ மற்றும் மாநில பள்ளி வாரியங்களால் நடத்தப்படும் பள்ளி தேர்வுகள் குறித்து, இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கலாம் என்று மாணவர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், எந்த முடிவும் எடுக்கப்படாததால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி, சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பின்னர் , பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, குஜராத் உள்ளிட்ட பல பள்ளி வாரியங்கள் மற்றும் ஐ.சி.எஸ்.இ., வாரியம் 12 ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.