ஆட்டோ ஓட்டுநர் மகள்; சிதைந்த மருத்துவர் கனவு- முதல் பெண் முஸ்லிம் ஐஏஎஸ்- அசத்திய அடிபா!
முதல் இரண்டு முயற்சிகளில் தோல்வியே கிடைத்தது. தொடர்ந்து மூன்றாவது முறையாக நேர்காணலுக்குச் சென்றார் அடிபா அனம். ஆனால் அங்கும் தோல்வி.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகள், 4ஆவது முறையாகத் தேர்வு எழுதி ஐஏஎஸ் பணிக்குத் தேர்வாகி உள்ளார்.
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
எந்த ஒரு வெற்றிக்குப் பின்னாலும் கடின உழைப்பும் விடாமுயற்சியும் ஒளிந்திருக்கும். அப்படித்தான், மகாராஷ்டிர மாநிலம், யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் அடிபா அனம், மாநிலத்தின் முதல் முஸ்லிம் பெண் ஐஏஎஸ் ஆகத் தேர்வாகி இருக்கிறார். விவசாயிகள் தற்கொலை அதிகம் நடக்கும் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர் அடிபா. இவர் 2024ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 142ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறார் அடிபா.
அடிபாவின் தந்தை குடும்பக் கஷ்டம் காரணமாக தனது படிப்பை முடிக்க முடியாமல், ஆட்டோ ஓட்டுநர் ஆனார். தான் படும் கஷ்டத்தைத் தன் மகள் படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தன் மகளைப் படிக்க வைத்தார்.
சிதைந்த மருத்துவர் கனவு
கணிதத்தில் புலியாக இருந்த அடிபா, மருத்துவம் படிக்க ஆசைப்பட்டார். ஆனால் அதற்கு வசதியில்லை என்பதால் அந்தக் கனவு சிதைந்தது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுத முடிவு எடுத்தார். பிஎஸ்சி கணிதம் எடுத்துப் படித்தார். புனேவில் உள்ள இனாம்தார் சீனியர் கல்லூரியில் பட்டப் படிப்படை முடித்தவர், ஜாமியா உறைவிடப் பயிற்சி அகாடமியில் யுபிஎஸ்சி பயிற்சியை எடுத்துக் கொண்டார்.
தீவிரமாக யுபிஎஸ்சி பயிற்சிக்குத் தயார் ஆனார். ஆனால் முதல் இரண்டு முயற்சிகளில் தோல்வியே கிடைத்தது. தொடர்ந்து மூன்றாவது முறையாக நேர்காணலுக்குச் சென்றார் அடிபா அனம். ஆனால் அங்கும் தோல்வி.
முதல் பெண் முஸ்லிம் ஐஏஎஸ்
விடாமுயற்சியுடன் நான்காவது முறையாக முயற்சி செய்தார் அடிபா. இதில், அகில இந்திய அளவில் 142ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறார் அடிபா. இதன் மூலம் ஐஏஎஸ் பணிக்குத் தேர்வாகி உள்ளார். மாநிலத்தின் முதல் பெண் முஸ்லிம் ஐஏஎஸ் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகி உள்ளார் அடிபா.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மகாராஷ்டிர அமைச்சருமான மாணிக்கராவ் தாக்கரே தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டுத் தெரிவித்தார். அவர் வெளியிட்ட பதிவில், ’’மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த அடிபா அனாம் அஷ்பக் அகமது இந்தியாவில் 142வது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக, அடிபா UPSC நேர்காணலுக்குத் தேர்வானார், ஆனால் இறுதிப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இருப்பினும், இந்த முயற்சியில், அவர் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்து, IAS பதவியைப் பெறுவதற்கான பாதையில் உள்ளார். அடிபா மகாராஷ்டிராவின் முதல் பெண் முஸ்லிம் IAS அதிகாரியாக மாறியுள்ளார்.
அடிபா ஹஜ் ஹவுஸ் IAS பயிற்சி நிறுவனத்திலும் பின்னர் ஜாமியா உறைவிட பயிற்சி அகாடமியிலும் மாணவியாக இருந்தார். அவரது வெற்றி பல மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும்’’ என்று பதிவிட்டுள்ளார்.
பெண்களுக்காகப் பணியாற்றுவேன்
சிவில் சர்வீஸ் பணிக்கான பயணம் குறித்துப் பேசிய அடிபா அனம், ஒடுக்கப்பட்ட குறிப்பாக பெண்களுக்காகப் பணியாற்றுவதில் உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.






















